செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழகம்

கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த நீர்மட்ட உயரமான 24அடியில் நேற்றைய நிலவரப்படி 20.15 அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து 1,510 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் இருந்தது.

மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 2,641 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்து இருந்தார்.

அதன்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று கூடுதலாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதன்மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் உபரிநீர் திறப்பும் படிப்படியாக உயர்த்தப்படும் எனவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 20 அடியில் வைத்து கண்காணிக்கவும் முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட இருப்பதை அறிந்ததும், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆடு மாடுகளை அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டிச்சென்றனர்.

அவர்கள் செம்பரம்பாக்கம் ஏரி மதகின் முன்புறம் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்லும்வரை காத்திருந்து அதன்பிறகு உபரிநீரை அதிகாரிகள் திறந்து விட்டனர்.

-ராஜ்

ஸ்டாலின் பயணம்- ரூட் மாற்றம்? பதற்றத்தில் அதிகாரிகள்! 

கிச்சன் கீர்த்தனா: எலுமிச்சை – கொத்தமல்லித்தழை – காய்கறி சூப்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *