மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னையில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விளை பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 9) தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இழப்பீட்டுத் தொகை உயர்வு!
அதில், “மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
குடிசைகளுக்கான தொகை!
சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பயிர் சேதத்துக்கு எவ்வளவு?
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கப்படும்:
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
படகுகளுக்கான மானியம்
சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும்,
பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும்.
அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு லட்சமாகவும்,
முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும்.
அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சென்னைக்கு ரூ.4000 கோடி: எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 !