கோவில்பட்டி : கரிசல் மண்ணுக்கு வந்து சென்ற விமானம்… பின்னணி என்ன?

Published On:

| By Kumaresan M

கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவில்பட்டியை அடுத்துள்ள நாலாட்டின் புதூர், தோணுகால் உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனம் ஒன்று விமான ஓடுதளம் அமைத்துள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக விமான ஓடுதளம் பயன்படுத்தப்படவில்லை.

இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி 10 பயிற்சி விமானங்களை இயக்க முடியும். இந்நிலையில், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான ‘டிட்கோ’ கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக சில நிறுவனங்களிடம் டிட்கோ நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பல நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டியுள்ளன. இதையடுத்து, பயிற்சி மையத்துக்காக அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியை டிட்கோ மேற்கொண்டுள்ளது. வரும் ஜூன் மாதத்திற்குள் கோவில்பட்டியில் உலகத்தரத்தில் விமானப் பயிற்சி மையம் தொடங்கப்படும் என தெரிகிறது.

கோவில்பட்டியில் ரன்வே அமைந்தது எப்படி?

நாலாட்டின்புதூர் மற்றும் தோணுகால் கிராமத்தில் மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கி.மீ நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. கோவையைச் சேர்ந்த லட்சுமி மில்ஸ் நிர்வாகம் சார்பில், தங்களது தனி விமானத்தை இறக்குவதற்காக உருவாக்கப்பட்டது. கோவில்பட்டியிலும் லட்சுமி மில்ஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ்னா வகை சிறிய ரக விமானத்தில் வந்து சென்றுள்ளனர். இன்னும் வேறு சிலரும் இந்த ஓடுதளத்தைப் பயன்படுத்தி வந்தனர். இரு கிராமங்களில் 63 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஓடுதளம், 1998ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share