பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நேற்று (ஜனவரி 12) ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். பேருந்துகளில் மட்டும் 2.17 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். சொந்த வாகனங்கள், ரயில்கள், விமானங்கள் மூலமாகவும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இது போன்ற விடுமுறை நாட்களில் வழக்கமாக ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்திவிடும். தற்போது விமான நிறுவனங்களும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
அதன்படி, சென்னை – மதுரை செல்வதற்கு வழக்கமாக 3,367 ரூபாய் கட்டணமாக இருந்த நிலையில் தற்போது விலை அதிகரித்து ரூ.17,262 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை – கோவை செல்ல வழக்கமாக ரூ.3,315 இருந்த நிலையில் தற்போது ரூ.14,689 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை – சேலம் செல்ல ரூ.2,290 இருந்த நிலையில் தற்போது ரூ.11,329 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – திருச்சி செல்ல ரூ.2,264 இருந்த நிலையில் தற்போது ரூ.11,369 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை – தூத்துக்குடி 3,624 இருந்த நிலையில் தற்போது ரூ.13,639 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தேசிங்கு ராஜா படத்தின் பார்ட் 2 அறிவிப்பு!