சென்னையில் பனிப்பொழிவு மற்றும் புகை மூட்டம் குறைந்ததால் மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று மக்கள் அதிகாலையில் எழுந்து போகிப் பண்டிகையை கொண்டாடினர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சொல்லிற்கேற்ப மக்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிலிட்டு எறித்தனர். தமிழ்நாடு முழுவதும் விடிய விடிய மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போகி பண்டிகையைக் கொண்டாடினர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதன் காரணமாக சென்னையில் 44 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சென்னையிலிருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத், மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புகை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் தரையிறங்கவிருந்த சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லி ஆகிய இடங்களிலிருந்து வந்த விமானங்கள் புகை மூட்டம் காரணமாக ஐதராபாத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது பனி மற்றும் புகைமூட்டம் குறைந்துள்ளதால் சென்னையில் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. விமானங்கள் புறப்படுவதற்கு தாமதமானதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வைரமுத்து வரிகளில் ‘தமிழர் திருநாள் தையே’!
எங்கெல்லாம் சென்னை சங்கமம் நடைபெறுகிறது?