பழைய குற்றால அருவியில் மே 17ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு தொடர்பான புதிய வீடியோ இன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கோடை கால மழை தொடர்ந்து பல இடங்களில் பெய்து வருகிறது. இதன்காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க கோடை காலங்களில் ஏராளமானவர்கள் வருகை தருவது வழக்கம்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் பொதுமக்கள் குளிக்க கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. ஆனால், பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மே 17ஆம் தேதி திடீரென பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவியில் நீர்வரத்து அதிகமானதால் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பழைய குற்றால அருவியிலும் சுற்றலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மக்கள் அலறிக் கொண்டு ஓடும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், பழைய குற்றால அருவியில் திடீரென நீர்வரத்து அதிகமானதும், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பதறிக்கொண்டு ஓடும் காட்சி பதிவாகி உள்ளது. நீர்வரத்து அதிகமானதும், சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற காவலர் ஒருவர் ஓடுவதும் பதிவாகியுள்ளது.
அப்போது ஒரு பெண் “வீடியோலாம் எடுக்காத டாடி, அங்க யாரையாவது போய் காப்பாத்து” என்று பதட்டத்துடன் கத்துகிறார்.
அவருடன் இருந்த பெண் ஒருவரும் “யாரையாவது காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார். யாரும் எதிர்பாராத நேரத்தில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கிருந்த மக்கள் அனைவரும் அங்கும் இங்கும் ஓடும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
ஆபத்தான நேரத்தில் வீடியோ எடுப்பதை விட்டுவிட்டு மக்களை காப்பாற்றுங்கள் என்று சிறுமி உதவும் நோக்குடன் கத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு, “அந்த மனசுதான் சார் கடவுள்” , “குழந்தைகள் பெற்றோர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலை” என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்!