மீனவர்களைச் சிறை பிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!

தமிழகம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் இன்று (அக்டோபர் 29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர்,

மைக்கேல் ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

fisherman protest requesting to release arrested mans by srilanka

இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதுமட்டுமின்றி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (அக்டோபர் 29) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று மீனவர்கள் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய ஒரு விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2019 முதல் 2022 வரை சிறை பிடிக்கப்பட்டு இலங்கை கடற்படை வசம் உள்ள அனைத்து விசைப்படகுகளையும் அனைத்து நாட்டுப் படகுகளையும் மீட்டு தர வேண்டும்.
பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்க நிரந்தர தீர்வு பெற்றுத் தர மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ள மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மோனிஷா

நகர, மாநகர சபைக் கூட்டம்: மநீம பாராட்டு!

தேவர் குருபூஜை : 500 கார்கள் ரெடி – மாஸ்காட்ட தயாராகும் ஓபிஎஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.