தொடர் விடுமுறை காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று (அக்டோபர் 2) மீன்கள் விலை அதிகரித்துள்ளது.
சனி. ஞாயிறு வார இறுதி விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை உள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வது போல், பிற ஊர்களில் இருந்தும் சென்னையில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அசைவ விரும்பிகள் காசிமேடு துறைமுகத்தில் இன்று அதிகாலை முதலே மீன்களை வாங்கி செல்கின்றனர்.
இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் களைகட்டியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் கடைபிடிப்பதால், கடந்த இரண்டு வாரங்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க அதிகளவில் மக்கள் குவிந்துள்ளனர்.
மீன்கள் வரத்தும் வழக்கத்தை விட இன்று அதிகமாகவே இருந்ததாகவும், வஞ்சிரம், வவ்வால், சீலா, சங்கரா, திருக்கை, பால் சுறா, கோல் பாறை, கோலா என வகை வகையான மீன்கள் அதிகளவில் மீனவர்கள் வலையில் பிடிபட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
அதேசமயத்தில் மீன்கள் விலையும் அதிகரித்துள்ளன.
கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம் மீன் இன்று ரூ.1300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வவ்வால் மீன் ரூ.800-லிருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.
சங்கரா மீன் கிலோ ரூ.400-லிருந்து ரூ.800 ஆக உயர்ந்துள்ளது. நெத்திலி ரூ.250-க்கும், இறால், நண்டு ரூ.400, தோல்பாறை ரூ.350, வெள்ளை ஊடான் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் சில்லறை விலையில் மீன்கள் விற்பனை செய்யக்கூடிய மீன் வியாபாரிகள் அதிகளவில் வந்துள்ளனர்.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கிறீர்கள்?
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநர், முதல்வர்!