கன்னியாகுமரியைச் சேர்ந்த இக்னேஷியஸ் டெலாஸ் ஃப்ளோரா என்ற பெண் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு கட்டங்களாக பதவி உயர்வு பெற்று தற்போது செவிலியர் சேவையில் மேஜர் ஜெனரல் என்ற மதிப்புமிக்க பதவியை அடைந்துள்ளார்.
இதுகுறித்து நேற்று (ஆகஸ்ட் 2) இந்திய ராணுவத்தின் வடக்கு கமாடண்ட் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
அதில், கொரோனா காலக்கட்டத்தின் போது நிலைமையைக் கையாண்டது உட்பட அவரது நர்சிங் வாழ்க்கையில் தளராத ஆர்வத்துடன் தேசத்திற்கு சேவை செய்து வருகிறார்” என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது.
இந்த பதிவை டேக் செய்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “பெண்களால் முன்னேறக் கூடும் – நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்!
மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோராவின் சிறப்பான சாதனைக்கு வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண்மணி மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது நம்பமுடியாத மைல்கல்.
அவரது அற்புதமான தொழில், சேவை மற்றும் ஆர்வத்திற்கு வணக்கங்கள்” என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்திய ராணுவம், டெலாஸ் ஃப்ளோரா குறித்து பதிவிட்ட ட்விட்டை டெலிட் செய்தது.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, “தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ராணுவத்தின் வடக்கு கமாடண்ட் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) இந்திய ராணுவம் புதிய போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
HD IDS(Headquarters Integrated Defence Staff) ட்விட்டர் பக்கத்தில், டெலோஸ் ஃப்ளோரா ராணுவ செவிலியர் சேவை பிரிவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்த முதல் பெண், அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தலைமையகம் வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்னதாக வடக்கு மண்டலம் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்ததால் பதிவை நீக்கியதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
யார் சிறுபான்மையினர்? – சீறிய சீமான்
“ஓ.பி.ரவீந்திரநாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ஜெயக்குமார்