இனி சில்லறைக்காக சண்டை வேணாம்… டவுன் பஸ்களில் யுபிஐ டிக்கெட்!
சென்னை மாநகர பேருந்துகளில் UPI பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நாள்தோறும் ஏராளமான மக்கள் மாநகர பேருந்து வசதியை, போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்துகளில் பயணிக்கும் போது சரியான சில்லறை இல்லாமல், கண்டக்டர்களிடம் நாள்தோறும் பயணிகள் திட்டு வாங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதேபோல ”சில்லறைக்கு நாங்கள் எங்கே போவது?” என கண்டக்டர்கள் புலம்புவதையும் கேட்க முடியும். இதனால் பேருந்துகளிலும் UPI மற்றும் க்யூஆர் கோடு வசதியை கொண்டு வரும்படி, பயணிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பயணிகளின் வயிற்றில் பால் வார்ப்பது போன்ற அறிவிப்பு ஒன்றை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னையின் மாநகர பேருந்துகளில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
முதன்முறையாக பல்லாவரம் டெப்போவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக மற்ற டெப்போக்களுக்கும் விரிவு செய்யப்பட உள்ளது.
இதற்காக பல்லாவரத்தில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்களுக்கு, UPI மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த தொடுதிரை மூலம் பயணிகள் ஏறும் பேருந்து நிறுத்தத்தின் பெயர் மற்றும் அவர்கள் சேருமிடம் இரண்டையும் கண்டக்டர் தேர்வு செய்வார்.
இதையடுத்து பயணிகள் பணம், கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம். UPI முறை தேர்வு செய்யப்பட்டால் கியூஆர் குறியீடு திரையில் காட்டப்படும். பயணிகள் மொபைல் மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
இது மட்டுமின்றி தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும், கியூஆர் அடிப்படையிலான டிக்கெட் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகள் தங்கள் மொபைலில் உள்ள செயலிகளை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம். மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யலாம்.
இதற்காக அனைத்து பேருந்துகள், ரெயில்வே ஸ்டேஷன்களின் நுழைவு வாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களில் கியூஆர் ஸ்கேனர்கள் விரைவில் நிறுவப்பட உள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உயர்கல்வியில் மறுக்கப்படும் இட ஒதுக்கீடு!
ஆளுநர் ரவி அரசியல் களத்துக்கு வரலாம் : அமைச்சர் ரகுபதி அழைப்பு!