'First factory in eight months': Ola Electric CEO bavish Aggarwal

’முதன்முறையாக 8 மாதத்தில் உருவான தொழிற்சாலை’: ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பெருமிதம்!

தமிழகம்

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஓலா எலக்ட்ரிக் ஜிகா தொழிற்சாலை 25,000 பேருக்கு வேலைவாய்ப்புடன் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் செயல்படும் என்று அதன் சி.இ.ஓ பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (ஜனவரி 8) தொடங்கப்பட்டது.  முதல் நிகழ்வாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 8 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டில் பேசி வருகின்றனர்.

அதன்படி ஓலா எலக்ட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் பேசுகையில், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டின்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா எலக்ட்ரிக் ஜிகாபேக்டரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.

தமிழ்நாடு அரசின் சிறப்பான ஒத்துழைப்பால் 8 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஜிகா தொழிற்சாலை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும்.

ஜிகாஃபாக்டரி செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவில் லித்தியம் அயன் செல்களைத் தயாரிப்பதில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நம்பர் 1 இடத்தில் இருக்கும்.

இது நாட்டில் மின் வாகனங்கள் உற்பத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். மேலும் இதன்மூலம் 25,000 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலையாகக் கருதபடுகிறது. சுமார் 115 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலை, 5GWh தொடக்கத் திறனில் செயல்படும்.

பின்னர் படிப்படியாக 100 GWh முழு திறனுக்கு விரிவாக்கப்படும். எங்கள் இரு சக்கர வாகன உற்பத்தி திறன் ஆண்டுக்கு 10 மில்லியன் யூனிட்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த மின்சார வாகனங்கள் உற்பத்தியை உருவாக்குவதற்கான எங்கள் முதலீட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மின் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களை தயாரிப்பதில் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வரும் அதே வேளையில், தமிழகத்தின் வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்று பவிஷ் அகர்வால் கூறினார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், தமிழகத்தில் ரூ.7,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

TNGIM2024 : எந்தெந்த நிறுவனம்? எவ்வளவு முதலீடு?

பணமழையில் சந்தானம்!

 

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0