தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்று(அக்டோபர் 21) அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை அதிகாரிகள் படகை நிறுத்துமாறு கூறியதாகவும், ஆனால் படகு நிற்காமல் சென்றதால் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேலுக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காயம் அடைந்த மீனவரை இந்திய கடற்படை ஹெலிகாப்டரில் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் வீரவேலை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்பி வெங்கடேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ”மீனவர் வீரவேல் சுயநினைவோடு இருக்கிறார். அவரை காப்பாற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நம்முடைய தமிழக மீனவர்கள், நம் நாட்டைச் சேர்ந்த கடற்படை வீரர்களாலேயே துப்பாக்கியால் சுடப்படுகின்ற நிலை ஏற்படுவது வருத்தத்துக்குரிய விஷயமாக இருக்கிறது.
இலங்கை கடற்படை தான் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடும். அங்கு நடந்தது என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். எதுவாக இருந்தாலும் மீனவர்கள் சுடப்பட்டது கண்டனத்துக்குரியது” என்றார்.
கலை.ரா
பிரதமர் மோடியின் தீபாவளி எங்கே?
கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: ராமதாஸ் கண்டனம்!