சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தலைமறைவான உரிமையாளர், மேலாளர் உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 4) காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 கட்டிடங்கள் தரைமட்டமான நிலையில், பணியில் இருந்த 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்களை மீட்ட தீயணைப்புத் துறையினர் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 2 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்பட 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனினும் நான்கு பேரும் தலைமறைவான நிலையில், அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ரசாயன மூலப்பொருட்களை அஜாக்கிரதையாத கையாண்டதால் தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் சாய்நாத் பட்டாசு ஆலையின் உரிமத்தை வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புத்தாண்டில் முதன்முறையாக குறைந்த தங்கம் விலை!
பொங்கல் விடுமுறை : சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!
கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி : பள்ளித் தாளாளர் உட்பட 3 பேர் கைது!