Fireworks accident 14 people killed in Hosur

தொடரும் பட்டாசு விபத்துகள்: ஒசூரில் 14 பேர் பலி!

தமிழகம்

ஒசூர் பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

ஒசூர் அருகே அத்திப்பள்ளி பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள், குடோன்கள் அமைந்துள்ளன.

தீபாவளி நெருங்கி வருவதையொட்டி பட்டாசு கடைகளுக்கு சரக்கு வாகனத்தில் நேற்று பட்டாசுகள் வந்து இறங்கின

ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்த நவீனுக்கு சொந்தமான பாலாஜி கிராக்கர்ஸ் கடை மற்றும் அதனுடன் இணைந்த குடோனில் பட்டாசு பெட்டிகள் இறக்கி வைக்கும் பணி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில்  நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. கடைக்குள்ளும் தீப்பொறி விழுந்ததால் அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின.

இதனால் பெரும் விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வெளியில் இருந்த மற்ற சரக்கு வாகனங்களிலும் பற்றியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும், போலீசாரும்  ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆனால் அதற்குள்ளாகவே கடையில் பணியில் இருந்த 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர் அவர்களை மீட்ட போலீசார் கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்திருக்கிறது.

தருமபுரி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கிரி, விஜயராகவன், இளம்பருதி, ஆதிகேசவன், ஆகாஷ், முனிவேல், திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துரையைச் சேர்ந்த பிரகாஷ், வாணியம்பாடியை அடுத்த வெள்ளைகுட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், நித்திஷ் என 14 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

பட்டாசு கடை வெடிவிபத்து குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தசூழலில் பட்டாசுக் கடை உரிமையாளர் நவீன் ரெட்டி, அவரது தந்தை ராமசாமி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பட்டாசுக் கடை உரிமம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

அதுபோன்று படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் சக்கரபாணி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் அனுப்பப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கும் உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

டி.கே.சிவக்குமார் நேற்று விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை துரிதப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

கர்நாடக அரசு பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.

ஒசூர் துயரமே நீங்காத நிலையில் இன்று புதுக்கோட்டை மணல்மேல்குடி பகுதியில் பட்டாசு கடையில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த பகுதியைச் சேர்ந்த காளிமுத்து பட்டாசு கடை நடத்தி வரும் நிலையில், மின்கசிவு காரணமாக இன்று காலை விபத்து ஏற்பட்டிருக்கிறது.

காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் அதிகளவு மக்கள் இல்லை என்பதாலும் குறைந்த அளவிலான பட்டாசுகள் இருந்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பட்டாசு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் முதல்வர் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும்,

பட்டாசு கடைகள் பாதுகாப்பான இடவசதிகளோடு நடத்தப்படுகின்றனவா, உரிமம் பெற்று நடத்தப்படுகின்றனவா என ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

ஒசூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை, திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

பாஜக தலைவர் அண்ணாமலை

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கான உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

பிரியா

இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் மஸ்தான்

எல்.சி.யு டுவிஸ்ட், கமல் வாய்ஸ், கெட்ட வார்த்தை… லோகேஷின் அப்டேட்ஸ்..

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *