Firecracker accident in Sivakasi 14 people death

சிவகாசியில் பட்டாசு விபத்து : 14 பேர் பலி!

தமிழகம்

சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளனர்.

சிவகாசி அருகே கங்காகுளத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கணேச மூர்த்தி (43). இவர் ரெங்கபாளையம் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதனுடன் பட்டாசு விற்பனை கடையும் நடத்தி வருகிறார்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன் ஒருபகுதியாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் சிலவற்றை வெடித்து சோதனை செய்து பார்த்திருக்கின்றனர்.

இதில் ஏற்பட்ட தீப்பொறி பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்த அறையில் விழுந்து வெடித்து சிதறியிருக்கிறது. அப்போது பணியில் 50 தொழிலாளர்கள் இருந்திருக்கின்றனர். சிலர் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

இதில் வெடி விபத்தில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த முனீஸ்வரி (32), அழகாபுரியைச் சேர்ந்த தங்கமலை (33), அனிதா (45), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த பாக்கியம் (35), குருவம்மாள் (55) ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சிலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்ததில் பலி எண்ணிக்கை 13ஆக அதிகரித்திருக்கிறது.

சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் வெடி விபத்து நடந்த இடத்தில் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேபோன்று , சிவகாசிக்கு அருகே மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயனுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த வேம்பு உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தடுத்த விபத்துகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் எல்லையில் இருந்து சில மீட்டர் தூரத்தில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று சிவகாசியில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் ஏறத்தாழ 40 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கோவை, நெல்லை, மதுரை, ஆவடி மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்!

2040க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியா

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *