நெல்லை குப்பை கிடங்கில் மளமளவென பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை ராமையன்பட்டி பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைந்துள்ளது.
இதில் 32.5 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் இடம் அமைந்திருக்கிறது. இங்கு மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.
வழக்கமாக தென்மேற்கு பருவக்காற்று காலத்தின் போது இங்கு காற்றின் வேகத்தால் திடீரென தீ பற்றி மளமளவென எரிவதும், அதனை தீயணைப்புத் துறையினர் வந்து அணைப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் நேற்று (ஜூலை 20) இரவு 8 மணி அளவில் குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 லாரிகளில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நடந்த இந்த பணியினை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ மளமளவென பரவியது. இதனால் ராமையன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கத் தொடங்கியது. குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவிய காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை மண்டலம் சுமார் 5 கிலோ மீட்டர் பரப்பளவு வரை விரிந்து இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இது போன்ற நிலைக்கு தொடர்ந்து தள்ளப்பட்டு வருவதாகவும், சிலர் வேண்டுமென்றே குப்பை கிடங்கிற்கு தீ வைத்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நேற்றும், இன்றும் எரியும் குப்பை கிடங்கு தீயின் காரணமாக வெளியேறும் புகை மூட்டத்தினால் குப்பை கிடங்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மாற்று இடங்களுக்கு தற்காலிகமாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை சுமார் 300 பேர் நெல்லை – சங்கரன்கோவில் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அப்போது, மாவட்ட ஆட்சியர் உடனே வருகை தந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர் .
இதனையடுத்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் வருகை தந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
ஆனால் தற்போது வரை மளமளவென எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சரவணன், நெல்லை
டிஜிட்டல் திண்ணை: புழலுக்குள்ளும் எட்டிப் பார்க்கும் ED… செந்தில்பாலாஜி ஸ்டேட்டஸ் என்ன?
பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை? : ஜோதிமணி ஆவேசம்!