சென்னை சவுகார்பேட்டையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இன்று (அக்டோபர் 22) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களின் வங்கிக் கணக்கைப் பராமரித்து வருகிறது.
இந்த வங்கியின் முதல் தளத்தில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பற்றி எரிந்து ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறுவதைக் கண்ட வங்கியின் காவலாளி கிருஷ்ணமூர்த்தி உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடிக் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
வங்கியில் மின் கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டதாகவும் இதில் ஒரு அறை முழுவதும் இருந்த 4 கணினிகள், பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள், காசோலைகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகிவிட்டன எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தீயில் எரிந்து சேதமடைந்த பொருட்கள் குறித்து முழு விவரத்தை வங்கி ஊழியர்கள் சோதனையிட்டு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா
தமிழக மீனவர் காயம்: இந்தியக் கடற்படை மீது வழக்குப் பதிவு!
நெருங்கும் தீபாவளி: திடீரென்று உயர்ந்த தங்கம் விலை!