ஓசூரில் உள்ள டாடா தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓசூர் அருகே வன்னியபுரம் பகுதியில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
ஷிப்ட் அடிப்படையில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர். ஒரு ஷிப்ட்டுக்கு 1000 முதல் 2000 பேர் வரை பணியாற்றுகின்றனர்.
இந்தநிலையில் தொழிற்சாலையின் யூனிட் 4-ல் உள்ள பேண்டில் கெமிக்கல் தயாரிக்கும் பிரிவில் சுத்திகரிப்பு பணி நடைபெறும் பகுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அங்கிருந்த ரசாயனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. இதனால் கரும்புகை விண்ணை முட்டி ஊழியர்கள் மூச்சுவிட திணறினர். பாதுகாப்பு கருதி மற்ற அலகுகளில் பணிபுரிந்த நைட் ஷிப்ட் ஊழியர்கள் உள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவலறிந்து தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தீ விபத்தால் டாடா தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தால் 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்தும், எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் டாடா தொழிற்சாலை பேருந்து கெலமங்கலம் பகுதியில் சென்ற போது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் டாடா நிறுவனத்தின் சில பேருந்துகளை அடித்து நொறுக்கினர். தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்று அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படுவது டாடா தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
லெபனான் பேஜர் வெடிப்பு… பின்னணியில் இருந்த இந்தியர் மாயமான பின்னணி!
காஞ்சி செல்கிறீர்களா? வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு!