திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து: 7 பேர் பலி!
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் நகரில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நான்கு மாடிகளை கொண்ட இந்த மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.. உள் நோயாளிகளாக சுமார் 40 பேர் வரை அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வருகின்றன.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/Genh8BDXUAAc9qr-1024x768.jpeg)
இந்த நிலையில் நேற்று(டிசம்பர் 12) இரவு 9:30 மணிக்கு மேல் சிட்டி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அந்த தீ உடனடியாக மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுபோன்று இந்த தீ விபத்தின் போது லிப்டில் இருந்த ஆறு பேர் மயக்கம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் மீட்கப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ்கள் மூலம் மாற்று மருத்துவமனைக்கும் திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/Genh9TrWQAAS1OZ.jpeg)
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனை லிப்டில் இருந்த ஆறு பேரும் மயக்க நிலையில் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேலும் உயிரிழப்பு ஏற்படலாம் என்று தெரிகிறது. எத்தனை உயிரிழப்புகள் என்று மருத்துவர்கள் சொன்ன பிறகு தகவல் தெரிவிக்கிறோம். இப்போதைக்கு விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் யாரும் உள்ளே இல்லை” என்று கூறினார்.
தொடர்ந்து விபத்தில் சிக்கி வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ஐ பெரியசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்” : குகேஷ்க்கு குவியும் தலைவர்கள் வாழ்த்து!
ரசிகர்களுக்கு பர்த்டே ’வைப்’ கொடுத்த ரஜினி… அசத்தும் கூலி பட அப்டேட்!