சர்ச்சை பேச்சு : கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
பாஜக போராட்டத்தில் தமிழ்நாடு அரசை மிரட்டும் வகையில் பேசிய கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் போலீசார் இன்று (பிப்ரவரி 22) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததால் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கு காரணமான திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக போராட்டம்
இந்நிலையில் ராணுவ வீரர் பிரபுவின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று காலை தமிழக பாஜக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பலரும் ராணுவ வீரரின் கொலையை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக பேசினர்.
அதிலும் முன்னாள் ராணுவ வீரரும், தற்போது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான கர்னல் பாண்டியன் தமிழ்நாடு அரசை மிரட்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள்
அவர், “நான் தமிழ்நாடு அரசை ஒரு விசயத்தில் எச்சரிக்கிறேன். உலகத்திலேயே 2 வது பெரிய ராணுவம் இந்திய ராணுவம் தான். எந்த விசயத்தை செய்தாலும் ஒழுக்கமாகவும் உத்வேகத்துடன் செய்து காட்டுபவர்கள் ராணுவ வீரர்கள். அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் நல்லதல்ல.
எங்களுக்கு நீங்கள் பரிட்சை வைத்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது.
இங்கே அமர்ந்து இருக்கின்ற அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் குண்டு வைப்பதில், சுடுவதில், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள். எங்களுக்கு இந்த வேலைகள் எல்லாம் நன்றாகவே தெரியும்.
ஆனால், நாங்கள் இதை எல்லாம் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.” என்று பேசினார்.
தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை
அவரது மிரட்டல் பேச்சு குறித்து ’குண்டு வைப்பது தீவிரவாத செயல் இல்லையா? என்று செய்தியாளர்கள் போராட்டத்துக்கு பிறகு கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ”நான் மிரட்டவில்லை. எச்சரிக்கிறேன். இனிமேல் நீங்கள் செய்தால் நாங்கள் செய்வோம். இது மிரட்டல்தான். இது மிரட்டல்தான். தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன்.” என்று பேசினார்.
2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இவ்வாறு பொது அமைதிக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் பேசிய கர்னல் பாண்டியனின் பேச்சு சமூகவலை தளங்களில் வைரலானது. அவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில் சமூகவலைதளம் மற்றும் ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு பாஜக நிர்வாகி கர்னல் பாண்டியன் மீது திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி கர்னல் பாண்டியன் மீது மேலும் சில வழக்குப்பிரிவுகள் சேர்க்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அனுமதி இன்றி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி எச்சரிக்கை
முன்னதாக கிருஷ்ணகிரி எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் அளித்த பேட்டியில், “வேலம்பட்டி பிரச்சனை என்பது உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை. இதனை அரசியல் ஆக்க நினைத்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் அதையும் மீறி ஆளும் அரசுக்கும், பொது மக்களுக்கும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் பேசியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இலவச திருமண திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வு!
மு.க. அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!