குடும்ப அட்டைதாரர்களுக்கு இடையூறு ஏதுமில்லாமல் தங்களது வசதியின்படி நியாய விலைக் கடைக்கு வந்து கைவிரல் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு இன்று (பிப்ரவரி 11) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா மின்னணு குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கைவிரல் ரோகையை சரிபார்க்க வேண்டுமென மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
இதனையடுத்து ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு உணவுத்துறை, கைரேகையை பதிவு செய்யாவிட்டால் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படாது என்றும், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் இன்று மற்றொரு செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. அதில், “ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினரது விரல் ரேகை வைக்கப்படும் போது. ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது.
ரேஷன் கார்டுதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம்.
மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது. விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலை கூறக்கூடாது என்று ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’ஆர்டிக்கிள் 370’ படத்திற்கு எதிராக குவியும் கண்டனம் : தயாரிப்பாளர் பதில்!
நள்ளிரவில் கிளாம்பாக்கம் வரும் பயணிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் : சிவசங்கர்