கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்!

Published On:

| By Minnambalam

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆகஸ்டு 5 ஆம் தேதி சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசால் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து வருவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 18 கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் இன்று முதல் மாநகராட்சியின் சார்பில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இரு வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வரும் அல்லது பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6 ) முக்கிய பகுதிகளில் மின்தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel