கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவிருக்கும் நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் கார்கள் அடித்துச்செல்லப்பட்டன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு மழை வருவதற்கு முன்பே வேளச்சேரி, விஜயநகர், ராமநகர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர் தங்களது கார்களை வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு எதிரில் உள்ள மேம்பாலத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.
பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனைக்கு எதிரில் உள்ள மேம்பாலம், வேளச்சேரி புதிய மேம்பாலம், தரமணியில் இருந்து 100 அடி சாலைக்கு செல்லும் மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீசார் அங்கிருந்து கார்களை எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இருந்தாலும் கார்களை எடுத்துச் செல்லாமல் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு கார் பதிவெண்களை வைத்து அபராதம் விதித்த போலீசார் அந்த ரசீதை கார் கண்ணாடியில் வைத்துவிட்டு சென்றனர்.
எனினும் மேம்பாலங்களில் கார்களை எடுத்துச் செல்லாமல் நிறுத்தி வைத்திருக்கும் வாகன ஓட்டிகள், “மழையால் பாதிப்பு ஏற்பட்டு ஷோரூம்களில் சரி செய்தால் 50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அதற்கு பதில் இங்கு ரூ.1000 ரூபாய் அபராதத்தை செலுத்திவிடுவோம். காருக்கும் எந்தவித பாதிப்பும் வராது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள்… மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு!