ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ரவுடிகள் கைது செய்யப்படுவதும், என்கவுன்ட்டர் செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை ரவுடிகள் திருவேங்கடம், காக்காத்தோப்பு பாலாஜி ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியான சீசிங் ராஜா ஆந்திரா குவாரியில் பதுங்கியிருந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 22) மாலை சென்னை சிட்டி போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரித்ததன் அடிப்படையில், நீலாங்கரை அருகில் அவர் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது, தற்காப்பிற்காக துப்பாக்கியால் போலீசார் சுட்டதில் உயிரிழந்தார் சீசிங் ராஜா.
யார் இந்த சீசிங் ராஜா? டாப் 10 ரவுடியாக வளர்ந்த பின்னணி பார்ப்போம்..
ஆந்திராவை சேர்ந்த நரசிம்மன், தமிழகத்தைச் சேர்ந்த அங்காளம்மாள் என்ற தம்பதியர்க்கு ராஜா மற்றும் பாபு என்ற 2 மகன்கள். தாம்பரம் சேலையூர் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட சிட்லபாக்கம் ராமகிருஷ்ண புரத்தில் வசித்து வந்தனர். தாயார் அங்காளம்மாள் இறந்துவிட்டார். தந்தையான நரசிம்மன் வேறொரு மனைவியுடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். சகோதரர் பாபு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
ராஜாவின் முதல் மனைவி ஜானகி, இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் பிள்ளைகள். மூத்த மகள் கீர்த்தனா பட்டப்படிப்பு முடித்துவிட்டு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகன் தனுஷ் கிரெசண்ட் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வருகிறார். மூன்றாவது மகன் லோகேஷ் பத்தாம் வகுப்புடன் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
மனைவி மற்றும் 3 பிள்ளைகளை சிட்லபாக்கத்தில் விட்டுவிட்டு, ஆந்திராவில் உள்ள சித்தூரில் 2வது திருமணம் செய்தார். அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளது.
மூன்றாவதாக 2023ல் அதே ஆந்திராவில் மற்றொரு பெண்ணை மணந்த நிலையில் தற்போது அவருக்கு ஒன்றரை மாத கைக்குழந்தையாக உள்ளது. அவர் தான் தற்போது மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
எனினும் மூன்று குடும்பத்துக்கும் அசையும், அசையா சொத்துகளை கொடுத்தவர், மாதந்தோறும் குடும்ப செலவிற்கு தேவையான பணமும் கொடுத்து வந்தார்.
சீசிங் – அடையாள பெயர் வந்தது எப்படி?
2005ஆம் ஆண்டுக்கு முன்பு ராஜா தனியார் பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் தவணை செலுத்தாதவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்து வந்தார். இவர் வாகனங்களை சீசிங் செய்வதில் கில்லாடியாக இருந்துள்ளார். எவ்வளவு பெரிய கூட்டத்தில் வண்டியை நிறுத்தியிருந்தாலும், தைரியமாக வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்து விடுவார்.
யாராவது எதிர்த்து கேள்விகேட்டால், அவர்களையும் தாக்கிவிட்டு வந்துவிடுவார். அதனால் தாம்பரம் பகுதியில் உள்ள பல பைனான்ஸ் கம்பெனிகள் ராஜாவின் உதவியை நாடினார்கள். அப்படி வாகனத்தை சீசிங் செய்ததில் ஏற்பட்ட தகராறில் ராஜா மீது 2006ஆம் ஆண்டு சேலையூர் காவல்நிலையத்தில் முதல் வழக்கு பதிவானது. அப்போது தான் காவல்நிலையத்தில் ராஜாவுக்கு ‘சீசிங் ராஜா’ என அடையாள பெயர் வைக்கப்பட்டது.
சீசிங் ராஜா தொடர்புடைய வழக்குகளின் பின்னணி!
வாகனங்களை சீசிங் செய்யும்போது சிறுசிறு பிரச்சனைகள், மோதல்கள் என இருந்தவர், காவல்நிலையத்தில் புகார், கட்டப்பஞ்சாயத்து என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ரவுடியாக மாறினார். அவ்வப்போது சிறைக்கு சென்று வரும்போது சிறையில் உள்ள ரவுடிகள் தொடர்பு கிடைத்தது.
திண்டுக்கல் பாண்டி, மோகன் ராம், சம்போ செந்தில் போன்ற ரவுடிகளின் தொடர்புகள் கிடைத்ததை அடுத்து தனது ரவுடியிசத்தை விரிவுபடுத்தினார். இவர் மீது 6 கொலை வழக்கு அதில் இரட்டை கொலை வழக்கு இரண்டு உள்ளது. மேலும் ஆள் கடத்தல், மிரட்டல், நில மோசடி, கொலை முயற்சி என செங்கல்பட்டு, சேலையூர், சிட்லபாக்கம், தாம்பரம் ஆகிய காவல்நிலையங்களில் 39 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆறு வருடங்களுக்கு முன்பு தாம்பரம் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் போர்ட்டிகோவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கி, அங்கிருந்த சிசிடிவி கேமிரா முன்பு காட்டி, ”இதோ உன் குழந்தையை நான் தூக்கிட்டு போகிறேன்” என்று கூறிவிட்டு கடத்தினார். பின்னர் பெற்றோரிடம் பணம் பேரம்பேசி வாங்கிக்கொண்டு, போகும் வழியில் குழந்தையை விட்டுவிட்டு சென்றார். அப்போது இந்த வழக்கில் போலீசார் தேடியபோது, ஆந்திராவில் தலைமறைவாகிவிட்டார்.
2015ல் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு வந்த ரவுடி சின்னாவையும், வழக்கறிஞர் பகத்சிங்கையும் ஒரே நேரத்தில் வெட்டி கொலை செய்தார். அதே போல் அசோக் நகர் பகுதியில் இருவரை கடத்தி செல்லும்போது, வழியிலேயே ஒருவரை கொலை செய்துவிட்டு, இன்னொருவரை உயிருடன் விடுவதற்கு தேவையான பணத்தை வாங்கிவிட்டு உயிருடன் விட்டார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை கடத்தி 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த தொழிலதிபர் தப்பித்து ஓடி வந்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், முதலில் புகார் பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. அதன்பிறகு தான் 2021ல் போலீசார் சீசிங் ராஜாவை கைது செய்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்து உரிமம் பெறாத ஒரு கை துப்பாக்கி, 14 தோட்டாக்கள், 7 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.
2023ல் நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் கைதாகிய சீசிங் ராஜா, அதைத்தொடர்ந்து போலி பத்திரங்களை உருவாக்கி நிலத்தின் ஒரிஜினல் ஓனரை மிரட்டி பணம் பறிப்பது, ஆள் கடத்தி பணம் பறிப்பது, கட்டப் பஞ்சாயத்தில் கட்டுப்படாதவர்களை கொடூரமாக கொலை மற்றும் குற்றங்களை செய்துவிட்டு, ஆந்திர மாநிலம் சித்தூர் சென்று தலைமறைவாகிவிடுவதுமாக இருந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட காலமாக வாரண்ட் இருந்து வந்தது. இந்த நிலையில் சீசிங் ராஜாவை தேடி வந்த போலீசார், அவருக்கு ஜாமீன் கொடுத்த அவருடைய முதல் மனைவி ஜானகி, அவரது தங்கை ஜெயலட்சுமி இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார் சேலையூர் இன்ஸ்பெக்டர் சந்துரு.
நீதிமன்றத்தில் ஜெயலட்சுமியும், ஜானகியும், ”சீசிங் ராஜா இருக்குமிடம் எங்களுக்கு தெரியாது.. நாங்கள் பிரிந்து வாழ்கிறோம்” என்றதும், இருவருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதையும் செலுத்திவிட்டு வெளியே வந்தனர்.
அதன்பிறகு இன்ஸ்பெக்டர் சந்துரு, நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். சீசிங் ராஜா அறிவிக்கபட்ட குற்றவாளி, தேடப்படும் குற்றவாளி என அறிவிப்பு செய்வதற்கு நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி, ‘சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளி, இவரைக் கண்டால் உடனடியாக தகவல் தெரிவியுங்கள்’ என்று சீசிங் ராஜா படத்துடன் தாம்பரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. மேலும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்து பெரும் நெருக்கடியை உருவாக்கி சீசிங் ராஜாவை தனி டீம் போட்டு தேடிவந்தனர் சேலையூர் போலீசார்.
அதே வேளையில், சென்னை சிட்டி போலீசாரும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஆந்திரா சித்தூர் பகுதியில் உள்ள ஒரு குவாரியில் இருந்ததை கண்டுபிடித்து சீசிங் ராஜாவை கைது செய்தனர்.
ஆந்திரா சித்தூர் பகுதியில் சீசிங் ராஜா தஞ்சமடைந்தது ஏன் என்பது பற்றி அவரை கைது செய்த ஸ்பெஷல் டீமிடம் விசாரித்தோம்.
சித்தூர் முன்னாள் எம்.எல்.ஏ சி.கே.பாபுவுக்கு சொந்தமான குவாரிகளை சீசிங் ராஜா பினாமியாக கவனித்து வந்தார். அவரது பாதுகாப்பில் தான் சீசிங் ராஜா பிடிக்க முடியாத அளவுக்கு இருந்தார். மேலும் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளையும், ஆந்திரா சித்தூரில் தனது கட்டுப்பாட்டில் உள்ள குவாரியில் அடைக்கலம் கொடுத்துள்ளார் சிசீங் ராஜா.
இதுதவிர பல குடும்ப பெண்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அவர்கள் குடும்ப கெளரவம் நினைத்து புகார் கொடுக்காமல் தங்களுக்கு தெரிந்த காவல் உயர் அதிகாரிகளிடம் தகவல்களை மட்டும் தெரியப்படுத்தி சீசிங் ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வந்தனர்.
சரியான புகார்கள் இல்லாததால் நேரம் பார்த்து வந்த காவல் துறையினர் நேற்று சீசிங் ராஜாவை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருந்த நேரத்தில், அவர்களை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற நேரத்தில் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார் சீசிங் ராஜா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்!
ஒரு மக்கள் பிரதிநிதி இப்படியெல்லாம் பேசலாமா? : சிவி சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!