மக்களின் பிரச்சினையை தீர்த்து, பாதுகாக்க கூடிய காவல்துறை அதிகாரிகளே ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி மோதிக்கொண்ட நிகழ்வு கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக 2023 பிப்ரவரி 16 ஆம் தேதி ராஜா பொறுப்பேற்றார். 5 வருடங்களுக்கு முன்பு நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டராக ராஜா இருந்தபோது குற்ற வழக்கில் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிஎன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இதனால் இன்ஸ்பெக்டர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2023 பிப்ரவரி மாதம் நெய்வேலி உட்கோட்டம் வடலூர் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக வந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியான சிபிஐ (எம்) மாவட்ட அளவில் போராட்டம் நடத்தியது, டிஜிபி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து மனுவும் கொடுத்தனர்.
“நெய்வேலி உட்கோட்டத்தில் நடந்த லாக்அப் டெத் வழக்கில் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ராஜா மீண்டும் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதிக்கு வந்திருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் அவரை உடனடியாக வேறு மாவட்டத்திற்கு மாற்றவேண்டும். அவரை சஸ்பெண்ட் செய்யவேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் வடலூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கும், சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கருக்கும் இடையே நேற்று (ஏப்ரல் 6) சண்டை ஏற்பட்டுள்ளது. அதனை காவல்நிலையத்துக்கு வெளியே இருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வடலூர் காவல் நிலையத்தில் விசாரித்தோம்.
“வடலூர் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஜெய்சங்கர் பணியாற்றி வருகிறார். இங்கு இன்ஸ்பெக்டராக வந்த ராஜாவுக்கும், ஜெய்சங்கருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் ஜெய்சங்கர் மருத்துவ விடுப்பில் சென்று பின் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தான் டியூட்டிக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 6ஆம் தேதி காலை 10.00 மணி அளவில் ரோல்கால் (ஆஜர் அணிவகுப்பு) நடந்தது, அதில் இரண்டாம் நிலை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையில் கலந்து கொண்டனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரை குறிவைத்து பேச, பதிலுக்கு ஜெய்சங்கர் இன்ஸ்பெக்டரை நேரடியாக கேட்க இருவரும் மிக கேவலமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் அடிக்க பாய்ந்துகொண்டனர், சக போலீசார் குறுக்கிட்டு இருவரையும் விலக்கி அழைத்துச் சென்றனர். அப்போது காவல் நிலையத்துக்கு வெளியில் இருந்த பொதுமக்கள் சண்டையை வேடிக்கை பார்த்தனர்” என்கிறார்கள் காவல் நிலையத்தில் இருந்த சில போலீசார்.
மேலும் அவர்கள், “இன்ஸ்பெக்டர் சண்டை போடுவது இது புதிது கிடையாது. டாஸ்மாக் பார் மாமூல் விவகாரத்தில் நேரடி எஸ்ஐ சங்கரும், இன்ஸ்பெக்டரும் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டனர்.
வடலூர் காவல் நிலையம் லிமிட்டில் ஐந்து பார் உள்ளது. மாசம் மாமூலாக ஒரு பாருக்கு 15 ஆயிரம் என ஐந்து பாருக்கு 75 ஆயிரம் இன்ஸ்பெக்டருக்கு கிடைக்கும்,
இதை அறிந்த எஸ்ஐ சங்கர், இன்ஸ்பெக்டருக்கு ஒரு பாருக்கு 15 ஆயிரம் கிடைக்கிறது. எனக்கு மட்டும் ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்று பார் நடத்துபவர்களிடம் கேட்டவர், ஒரு நாள் அதிரடியாக அனைத்து பார்களிலும் ரெய்டு நடத்தினார்,
இதை அறிந்த இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்ஐ சங்கரை கேட்க, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. வடலூர் காவல் நிலையத்தில் இன்னும் என்னென்ன சண்டை நடக்கப்போகிறதோ தெரியவில்லை” என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
“இன்ஸ்பெக்டர் ராஜாவை மாற்றச் சொல்லி கடலூர் எஸ்பி ஆபிஸ் முதல் டிஜிபி ஆபிஸ் வரை கம்யூனிஸ்ட் கட்சி போராடியும் மாற்ற முடியவில்லை. அப்படி என்ன பலம் வாய்ந்தவர் ராஜா என தெரியவில்லை எனவும் கூறுகின்றனர் காவல் துறை அதிகாரிகள்.
வணங்காமுடி
ஐபிஎல் “சியர் லீடர்ஸ்”:ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?
விடுதலை ஷூட்டிங் : சுவாரஸ்யம் பகிர்ந்த விஜய் சேதுபதி