கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் மோதிக்கொண்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கும், சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கருக்கும் இடையேயான மோதல் குறித்து நமது மின்னம்பலத்தில், போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகளுக்குள் ஃபைட்: பின்னணி என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இன்ஸ்பெக்டர் ராஜாவும், சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரும் ரோல் காலில் (ஆஜர் – அணிவகுப்பு) தகாத வார்த்தைகளால் திட்டி மோதிக்கொண்டதையும், அவர்களை சக போலீசார் விலக்கிவிட்டதையும், இந்த நிகழ்வைக் காவல்நிலையத்துக்கு வெளியே இருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததையும் பின்னணியோடு வெளியிட்டிருந்தோம்.
மின்னம்பலம் செய்தியை தொடர்ந்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம், நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரனைத் தொடர்புகொண்டு மின்னம்பலம் செய்தியை ஃபார்வார்டு செய்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து டிஎஸ்பி ராஜேந்திரன் நேற்று இரவே வடலூர் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளார். கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ரோல் காலில் கலந்துகொண்ட அனைத்து போலீசாரிடமும் விசாரித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்…
“டிஎஸ்பி நடத்திய விசாரணையில், நீண்ட விடுப்பில் சென்று மீண்டும் பணிக்கு திருப்பிய சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரை பார்த்து பெண்டிங் வேலைகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ராஜா கூறினார். அப்போதுதான் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது என போலீசார் கூறியிருக்கின்றனர். விரைவில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கருக்கு மெமோவும், இன்ஸ்பெக்டர் ராஜா இட மாற்றமும் செய்யப்படுவார்” என்கிறார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள்.
வணங்காமுடி