சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (எஃப்.ஐ.ஏ) இன்று (ஆகஸ்ட் 31) அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில், இன்றும் நாளையும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டது.
இந்தநிலையில், கார் ரேஸுக்கு தடைக்கோரி பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கார் பந்தயம் நடத்த சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பு சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் என உத்தரவிட்டு, கார் பந்தயம் நடத்த அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) இரவு சென்னையில் பெய்த கனமழை காரணமாக, எஃப்.ஐ.ஏ அனுமதி கிடைக்க காலதாமதம் ஆனது. இதனையடுத்து சான்றிதழ் அளிப்பதற்கான காலக்கெடுவை இரவு 9 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்கான எஃப்.ஐ.ஏ சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் காலை முதல் ஆய்வு மேற்கொண்ட சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு கார் பந்தயம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, சென்னை தீவுத்திடலில் 2027-ஆம் ஆண்டு வரை கார் பந்தயம் நடத்தலாம். தற்போதுள்ள பந்தயத்திற்கான சர்க்கியூட்டில் மாற்றங்கள் செய்தால் தெரிவிக்க வேண்டும். மாற்றங்கள் செய்து தெரிவிக்காவிட்டால் தரச்சான்றிதழ் நிறுத்தி வைக்கப்படும் என்று எஃப்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு கார் பந்தயம் நடத்த அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று இரவு 7 மணி முதல் இரவு 10.45 மணி வரை பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஃபார்முலா 4 கார் ரேஸ்… எப்.ஐ.ஏ சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம்!
வாழை படத்தின் தாக்கம் இதுதான்… மாரி செல்வராஜ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது என்ன?