குழந்தைகளுக்குக் காய்ச்சல்: இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம்

புதுச்சேரியில் குழந்தைகளுக்குக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் 1 -8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகத் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகளவிலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனைச் சாதாரண காய்ச்சல் என்றும் பருவ மாற்றம் காரணமாக ஏற்பட்ட காய்ச்சல் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும், குழந்தைகளுக்குக் காய்ச்சல் பரவுதல் குறையவில்லை.

இதனால் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்குப் புதுச்சேரி சுகாதாரத்துறை பரிந்துரை செய்திருந்தது.

இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (செப்டம்பர் 17) முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 10 நாட்களாக பல்வேறு காரணங்களால் 50 சதவீத குழந்தைகளுக்குக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

பல குழந்தைகளுக்குக் காய்ச்சல், சளி, இருமல் அதிகமாகி உள்ளது. இந்த பாதிப்பு காரணங்களால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடன் மற்ற குழந்தைகள் தொடர்பில் இருப்பதால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

காய்ச்சல், சளி அறிகுறிகள் இருக்கும் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஏற்கனவே பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் அதிகரிப்பால் மாஸ்க், சமூக இடைவெளியைப் பின்பற்ற நாங்கள் அறிவுறுத்தியும் பாதிப்பு அதிகரித்தே உள்ளது.

இதனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் வரும் 25ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

a

தமிழகத்திலும், கடந்த சில தினங்களாகக் குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாகச் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல வார்டில் தினமும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். குழந்தைகள், பெரியவர்களை காற்றில் பரவும் ‘ப்ளூ’ வைரஸ் தாக்குவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மதுரையில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலம் காய்ச்சல் பரவலை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா தாக்கம் குறைந்து வரும் இந்த வேளையில் குழந்தைகள், பள்ளி சிறுவர்களிடையே காய்ச்சல் பரவுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது?

+1
3
+1
0
+1
6
+1
12
+1
2
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *