“தமிழகத்திலும் குழந்தைகளை காக்கும் வகையில், 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் இன்புளூயன்ஸா என்ற காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் தொற்றுக்காக, முகக் கவசம் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டதால் இந்த காய்ச்சல் குறைவாக இருக்கிறது.
சளி, இருமல், தொண்டை வலி ஆகியவை இன்புளூயன்ஸா காய்ச்சல் அறிகுறிகள் ஆகும்.
காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகள் விலகி இருக்க வேண்டும். H1N1 என்பது இன்புளூயன்ஸா என்னும் ஒருவகை வைரஸ் கிருமியால் பரவும் நோய். இது பன்றிக்காய்ச்சல் அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த காய்ச்சல் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.
அதுபோல் தமிழகத்திலும் குழந்தைகளை காக்கும் வகையில், 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 17) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன.
நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது. இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.
எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை.
இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும். தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன?
நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.
குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது.
குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் கவனிக்க வேண்டிய விவகாரம் இது.
ஜெ.பிரகாஷ்
குழந்தைகளுக்குக் காய்ச்சல்: இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை
லேப்டாப் திட்டத்தை நிறுத்திவிட்டு டைடல் பார்க் கட்டுவதா? உதயகுமார் கேள்வி!