வங்கக்கடலில் கடந்த சில தினங்களாகவே புயல் உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கூறிவந்தது.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 29) மதியம் 2.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ‘ஃபெஞ்சல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக ‘ஃபெங்கல்’ (Fengal) என்று இதை குறிப்பிட்டு வந்த நிலையில், அது தவறு என்றும், ஆங்கிலத்தில் FENGAL என்று எழுதப்படும் இந்த புயலின் பெயரை ‘ஃபெஞ்சல்’ (FENJAL) என்று உச்சரிக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
‘ஃபெஞ்சல்’ என்பது அரபியில் உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் (UNESCAP) குழுவின் உறுப்பினர் நாடுகளின் மொழி பாரம்பரியத்தையும் கலாச்சார அடையாளத்தையும் குறிக்கின்ற சொல்லாகும்.
புயல்களின் பெயர் எப்படி வைக்கப்படுகிறது?
வட இந்திய பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் (UNESCAP) குழுவின் உறுப்பினர் நாடுகள் தான் பெயர் வைக்கின்றன.
இதில் வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலதீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதில் இருக்கும் ஒவ்வொரு நாடுகளும் தலா 13 பெயர்களை கொடுக்க, 169 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்படும். இதிலுள்ள பெயர்கள் வரிசை பிரகாரம், வட இந்திய பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு சூட்டப்படும்.
இதன் அடிப்படையில்தான் சவுதி அரேபியா வழங்கிய ‘ஃபெஞ்சல்’ என்ற பெயர் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
அடுத்து உருவாகும் புயலுக்கு இலங்கை வழங்கியுள்ள ஷக்தி, அதற்கடுத்து உருவாகும் புயலுக்கு தாய்லாந்து வழங்கியுள்ள மோன்-தா என்ற பெயர்கள் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கல்விதுறையில் மட்டும் ரூ.1100 கோடி இழப்பு : அரசு வழக்கறிஞர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!
ஆர்டர்லி முறை : தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருப்பூர் கொடூரம்… மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாய கொலைகள்!