வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “ஃபெஞ்சல்” புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்த புயலானது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 80 – 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசை நமக்குள் எப்படி உருவாகிறது?
டாப் 10 நியூஸ்: இன்று கரையைக் கடக்கும் ஃபெஞ்சல் புயல் முதல் டிஜிபி-க்கள் மாநாட்டில் மோடி வரை!