ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரணம் ஒதுக்கியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள். 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளதோடு. 2.11 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு விவசாய, தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
“தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசர தேவையை கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும்” என்று கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, புயல் பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக ஸ்டாலினிடம் மோடி கேட்டறிந்தார்.
இந்தநிலையில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழு இன்று சென்னை வந்தது.
இக்குழு, நாளை பாதிக்கப்பட்ட உள் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
இந்தசூழலில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) ஒன்றிய அரசின் பங்காக 944.80 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்க மத்திய உள்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
சந்திரபாபு நாயுடுவை கைது செய்த ஐபிஎஸ் சஸ்பெண்ட்… பின்னணி இதுதான்!