ஃபெஞ்சல் புயல்… தயார் நிலையில் தமிழக அரசு!

தமிழகம்

ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக காவல், வருவாய், உள்ளாட்சித்துறை ஒன்றிணைந்து செயல்பட அந்தந்த துறையின் செயலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று (நவம்பர் 30) மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் 12 புயல் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 850 தற்காலிக மையங்கள், 38 மருத்துவ குழுக்கள், 19 மீனவ கிராமங்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக, மொத்தம் 239 இடங்கள் கண்டெறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தை 14 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் துணை ஆட்சியர் அல்லது உதவி இயக்குனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 191 தற்காலிக தங்கும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 25 நபர்கள் கொண்ட பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

மேலும், பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் வீரர்கள், தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் முக்கிய அறிவிப்புகளைக் கொடுத்துள்ளனர்.

அதன்படி… ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். போலீஸ் வாகனத்தில் கத்தி, மரம் வெட்டக்கூடிய வாள், ரோப் கயிறு, தண்ணீர், வாட்டர் பாட்டில், பிஸ்கட் வைத்திருக்க வேண்டும்.

சாலையில் மரம் சாய்ந்தாலோ அல்லது போக்குவரத்துக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ, உடனடியாக சீர் செய்ய வேண்டும். காவல்துறை அதிகாரிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

பேரூராட்சி, ஊராட்சிகளில் மின் தடை, குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க ஒவ்வொரு ஊரட்சியிலும் ஜெனரேட்டர்கள் வாடகை எடுத்து ரெடியாக வைத்திருக்கவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே உள்ளாட்சி துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, ஜெனரேட்டர்கள் வாடகைக்கு எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊராட்சியிலும் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்த பம்பு செட்டு, ஜேசிபி போன்ற வாகனங்கள் அமர்த்தப்பட்டு புயல், மழையை எதிர்கொள்ள உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, மருத்துவத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள், டாக்டர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணங்காமுடி

‘ஃபெஞ்சல்’ புயல்: சென்னையில் காற்றுடன் கனமழை… வேளச்சேரி மேம்பாலத்தில் கார் பார்க்கிங்!

மக்களே அலர்ட்… சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவில் ‘ஃபெஞ்சல்’ புயல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *