சென்னையில் பட்டப்பகலில் நடந்த வங்கிக் கொள்ளையில் மேலும் 10 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர்.
அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஃபெடரல் வங்கியின் தங்கநகைக் கடன் பிரிவான ஃபெட் வங்கியில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் முகமூடி அணிந்த 4 நபர்கள் நுழைந்து 32 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடிக் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர் அன்பு தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு கொள்ளையர்கள் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதில் எம்எம்டிஏ அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் வங்கியின் ஊழியரே கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீஸ் கைது செய்தது. கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகனை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் திருமங்கலம் காவல்நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 15) சரணடைந்தார்.
இதையடுத்து சூர்யா என்ற நபர் கோயம்புத்தூரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி விற்க கோவை நகை கடை உரிமையாளரிடம் கொள்ளை கும்பல் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியவந்தது. ஆனால், தங்க நகைகளை முழுவதுமாக உருக்க முடியாததால் விழுப்புரத்தில் உள்ள நண்பர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொள்ளையர்கள் பேச்சுவார்த்தை நடத்திய கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, கொள்ளையடித்துச் சென்ற 32 கிலோ தங்க நகையில் ஏற்கனவே 18 கிலோ நகையை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 10 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிரபல வங்கியாக இருந்தும் லாக்கரை திறந்து கொள்ளையடித்த போது தலைமை அலுவலகத்திற்கு எப்படி தெரியாமல் போனது என்ற சந்தேகம் இருந்து வந்தது.
அதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, வங்கியில் நுழைந்த கொள்ளை கும்பலின் தலைவன் முருகன் முதலில் வங்கியில் உள்ள அனைத்து இன்டர்நெட் தொடர்பையும் தூண்டித்திருப்பதும், இதன் காரணமாகவே வங்கியினுடைய மொத்த செயல்பாடுகளும் முடங்கி போனதும் தெரியவந்தது. மேலும் வங்கி மேனேஜரிடம் இருந்து ஸ்ட்ராங் ரூமுக்கானா இரண்டு சாவிகளை எடுத்து ஸ்டராங் ரூமை திறந்ததும் தெரியவந்துள்ளது.
கலை.ரா