குடிநீரில் மனித கழிவு: அதிர்ச்சியில் பட்டியலின மக்கள்

தமிழகம்

ஆதி திராவிட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிதண்ணீரில் இயற்கை உபாதை!

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக வேங்கைவாசல் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்களிடம், சுகாதாரமான தண்ணீர் குடிக்காததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஊரில் உள்ள மக்கள் அவர்கள் பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்த்தபோது அதில் இயற்கை உபாதை (மலம்) இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

வெளியேற்றப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர்!

இதனை தொடர்ந்து அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், குளத்தூர் தாசில்தார் சக்திவேல், வெள்ளனூர் காவல்துறை அதிகாரிகள், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் வேங்கை வாசல் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

தொட்டியில் இயற்கை உபாதை கலந்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. மேலும் குளோரின் தூள் மூலம் இரண்டு முறை தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. தற்காலிக நடவடிக்கையாக கிராம மக்களுக்கு நீர் வழங்குவதற்காக ஒரு பிளாஸ்டிக் நீர் தொட்டி அமைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டது.

மேல்நிலை தொட்டியில் தண்ணீர் நிரப்பிய பிறகு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அதன் மாதிரிகள் அனுப்பப்பட்ட பிறகே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் திட்டமிட்டே மனித கழிவு கொட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராடி கிடைத்த குடிநீர் தொட்டி!

இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பல வருடங்களாக குடிநீர் வசதி இன்றி இருந்த கிராமத்திற்கு பல போராட்டங்களை முன்னெடுத்த பிறகு, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தான் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

தொட்டியின் மேல் உள்ள மூடியை சிறியவர்கள் திறப்பது கடினம். இதனால் திட்டமிட்டே சிலர் தொட்டியின் மூடியை திறந்து மலம் கழித்திருப்பதாக அங்குள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், சமூகவிரோத மனப்பான்மை கொண்ட சிலர் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்திருக்கும்‌ செய்தி மிருந்த அதிர்ச்சியையும்‌ வேதனையையும்‌ அளிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வட மாநில கலாச்சாரம்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரம்‌ பெற்று 75 ஆண்டுகள்‌ கழித்தும்‌ இது போன்ற மனோபாவம்‌ கொண்டவர்கள்‌ நாகரிக சமூகத்தில்‌ வாழ்ந்து கொண்டிருப்பது எந்த வகையிலும்‌ ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த சம்பவத்தை கேள்விப்படும்‌ போது மிகப்பெரிய பதற்றத்தை உண்டாக்குகிறது. இந்த அநாகரீக செயலால்‌ அப்பகுதி மக்களுக்கு வாந்தி மயக்கம்‌ போன்ற ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் தான்‌ சங்பரிவார்‌ அமைப்புகளான ஆர்‌.எஸ்‌.எஸ், பாஜக.வினர்‌, பட்டியல்‌, பழங்குடியின மக்கள்‌ மீது வாயில்‌ மலத்தை திணிப்பது, சீறுநீர் கழிப்பது போன்ற சம்பவங்கள்‌ நடப்பதை கேள்விப்பட்டுக்‌ கொண்டிருந்தோம்‌. தற்போது உருமாறி வேறுவகையில்‌ தமிழ்நாட்டிற்குள்ளேயும்‌ வந்துள்ளதோ என்று அச்சம்‌ ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம்‌ கேள்விப்பட்டவுடன்‌ மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.ரகுபதி அவர்களை தொடர்பு கொண்டு பேசியவுடன்‌, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம்‌ தொடர்பு கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார்‌.” என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் இயற்கை உபாதை கலந்த மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செல்வம்

கால்பந்து இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்: ஒப்புக்கொண்ட நடுவர்!

142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.