கரும்புகளுக்கு கலர் பலூன்கள்: காரணம் என்ன?

தமிழகம்

கரும்புகளுக்கு  தஞ்சை விவசாயி ஒருவர் கலர் பலூன்களைக் கட்டியுள்ளது பலரின் கவனத்தையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒன்றரை மாதமே உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கரும்புகள் பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன் அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் அணில்களிடம் இருந்து கரும்புகளைப் பாதுகாக்க ஒரு புதிய ஐடியாவை ஒரு விவசாயி செயல்படுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலை பகுதியைச் சேர்ந்த விவசாயி (வயது 70) செல்வராஜ். இவர் தஞ்சை அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கரும்பு சாகுபடி செய்துள்ளார். அறுவடைக்கு தயாராக வளர்ந்து வரும் கரும்புகளை அணில்கள் சேதப்படுத்தி வந்தன. அணில்களிடமிருந்து கரும்புகளை காப்பாற்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பலனில்லை.

இதையடுத்து விவசாய ஆலோசகர் கோபுராஜ் வழிகாட்டுதல்படி பல வண்ண பலூன்களை கரும்பில் கட்டி தொங்க விட்டார். காற்றில் பலூன்கள் அசைவதால் அணில்கள் வராது என்றும், இதனால் அணில்கள் கரும்பில் ஏறுவது தடுக்கப்பட்டு கரும்பு பயிர் சேதமின்றி காப்பாற்றப்பட்டு வருகிறது என்று செல்வராஜ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள விவசாய ஆலோசகர் கோபுராஜ், “அணில்களுக்கு வண்ணங்கள் பிடிக்காது. அதனால் பல வண்ண பலூன்களை தொங்க விடும்போது அணில்கள் வராது. மேலும் சில நேரங்களில் பலூன்கள் வெடிக்கும்போது அந்த சத்தத்துக்கும் அணில்கள் கரும்புகளை அண்டாது. வெடிக்கும் பலூன்களுக்கு மாற்றாக புதிய பலூன்களை கட்டி தொங்க விட வேண்டும். இதற்கான செலவு மிகக் குறைவுதான். இப்படி அறுவடை முடியும் வரை தொடர்ந்து செய்வதன் மூலம் அணில்கள் தொல்லையில் இருந்து கரும்புகளை முழுமையாகக் காப்பாற்றலாம்” என்று கூறியுள்ளார்.

பயிர்கள் சேதமடைவதைத் தடுக்க விஷம் வைத்து விலங்குகளைக் கொல்லாமல், அணில்கள் வராமல் தடுக்க இந்த புதிய முயற்சி பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மிசோரம் தேர்தல்: வெற்றி கணக்கை துவங்கிய ஜோரம் மக்கள் இயக்கம்

மிக்ஜாம் புயலாக மாறிய அஜின்கியா பவார்: தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *