ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்: விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!

தமிழகம்

நீடித்த நிலையான வருமானத்துக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் இணைந்து பயன்பெற வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, நடப்பு 2022-23ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்திற்கு  ஒருங்கிணைந்த  பண்ணையம் எனும் தலைப்பில்,

பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவனப் பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு,  ஊட்டச்சத்து  காய்கறித் தோட்டம் போன்ற வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுப்புக்கு 50,000 ரூபாய் மானியம் வீதம், 13,000 ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்புகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

farmers should work together

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் நோக்கமும், பயன்களும் பயிர் சாகுபடி மட்டும் மேற்கொண்டால், அறுவடையின்போது மட்டுமே வருமானம் கிடைக்கும்.

ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதற்காக, பயிர் சாகுபடியுடன், விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொண்டால், விவசாயிகள் மட்டுமல்லாது, அவர்களின் வீட்டில் உள்ள பெண்களுக்கும் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், கூடுதல் வருமானமும் ஈட்ட இயலும்.

முதற்கட்டமாக 3,700 ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்புகள் அமைப்பதற்கு 18 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியை தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளித்து, அரசாணை தற்போது வேளாண்மை-உழவர் நலத்துறையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்ந்த அனைத்து வகையான பணிகளையும் ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பண்ணைய செயல்விளக்கம் அமைப்பதற்கு, 50 சதவிகித மானியம் வழங்கப்படும்.

அதாவது, ஊடு பயிர் அல்லது  வரப்புப்பயிர் சாகுபடிக்கு ரூ.5,000, கறவை மாடு அல்லது எருமை மாடு ஒன்று வாங்குவதற்கு ரூ.15,000, பத்து ஆடுகள் வாங்குவதற்கு ரூ.15,000, பத்து கோழிகள் வாங்குவதற்கு ரூ.3,000, இரண்டு தேனீப் பெட்டிகளுக்கு ரூ.3,200, 35 பழமரக் கன்றுகளுக்கு ரூ.2,000,

கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக பத்து சென்ட் பரப்பில் தீவன பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ரூ.800/-, மண்புழு உரத்தொட்டி அமைப்பதற்கு ரூ.6,000 ஆக மொத்தம் ஒரு ஹெக்டரில் ஒருங்கிணைந்த பண்ணையத் திடல் அமைப்பதற்கு 50 சதவிகித மானியமாக  50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகள் இனத்தில் ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகள் இத்திட்டத்தின் பலன்களை முழுமையாகப் பெறுவதற்கு, கூடுதலாக 20 சதவிகிதம் அதாவது ரூ.50,000 மானியத்துடன் கூடுதலாக ரூ.20,000/- மொத்தம் ரூபாய் 70,000/- மானியமாக வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பரிந்துரைக்கப்படும் பால்மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரத்தயாரிப்பில் ஈடுபடாமல் பயிர் சாகுபடி மட்டும் மேற்கொள்ளும் விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயனாளி ஆக முடியும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஹெக்டர் வைத்திருக்க வேண்டும்.

ஆதி திராவிடர்/பழங்குடியினர் விவசாயிகளாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆதார் அட்டையுடன், நிலம் வைத்திருப்பதற்கான ஆவணத்தையும் வருவாய்த்துறையிடம் இருந்து பெற வேண்டும். கூடுதலாக 20 சதவீத மானியத்தைப்  பெறுவதற்கு, ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினர் சான்றிதழுடன், சிறு / குறு விவசாயிகளுக்கான சான்றிதழையும் வருவாய்த்துறையிடம் பெற வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகவோ, www.tnagrisnet.tn.gov.in அல்லது www.tnhorticulture.gov.in இணையதளம் மூலமாகவோ, தேவையான விபரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, உங்கள் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களையோ அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலர்களையோ தொடர்பு கொள்ளலாம்.

ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புடன், கூடுதல் வருமானமும் ஈட்டுவதற்காக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

-ராஜ்

”ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அவசியம் என்றவர் ஓபிஎஸ்” – ஜேசிடி பிரபாகர்

அசோக் கெலாட் vs சச்சின் பைலட்: கார்கே யாருக்கு ஆதரவு?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *