காட்டுப் பன்றிகளால் பயிர்கள் அதிகம் சேதம் ஏற்படுவதால் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்களுடன் வந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கிருஷ்ணபேரி, மானகசேரி, ஈஞ்சார், நாகலாபுரம், நடுவப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கதிர் வைத்து விரைவில் அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில், கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகள் மக்காச்சோளப் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் பெருமளவில் மகசூல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, இக்கோரிக்கையை வலியுறுத்தி, காட்டுப் பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட மக்காச்சோள பயிர்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனை சந்தித்து விவசாயிகள் முறையிட்டனர்.
அப்போது, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளதாகவும், அதை எளிமைப்படுத்தி காட்டுப் பன்றிகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், காட்டுப் பன்றிகளால் பயிர் சேதம் அதிகமாக உள்ளதால் உற்பத்தி மற்றும் மகசூல் பாதிக்கப்படும் என்றும், இதனால் விலை உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், “காட்டுப் பன்றிகள் விவகாரத்தில் சட்ட விதிமுறைகளை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அதனால், அரசு உத்தரவில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகளை அறிந்து அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன், “காட்டுப் பன்றிகளை கொல்வதற்கு விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.
அதோடு, காட்டுப் பன்றி மற்றும் வன விலங்குகளால் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா கட்லெட்
சீமான் அந்நியனாவும் மாறுவார்… அம்பியாவும் மாறுவார்… : பிரேமலதா விமர்சனம்!
தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு…. கஸ்தூரிக்கு பாஜக கண்டனம்!
தென்னிந்தியாவின் எஃகு கோட்டை… இந்தியா டுடே பட்டியலில் இடம்பிடித்த ஸ்டாலின்