கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று (மே 22) ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை எனப் போற்றப்படுவது ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பவானிசாகர் அணை.
இந்த அணையில் இருந்து வெட்டப்பட்டுள்ள கீழ்பவானி கால்வாய் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,07,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.
கால்வாய் வெட்டப்பட்டு 65 ஆண்டுகளாகியும் சீரமைப்புப் பணிகள் நடைபெறாததால், கடைமடை வரை போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்களிடையே ஆதங்கக் குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில்தான் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ‘கீழ்பவானி கால்வாய் சீரமைக்கும் திட்டம்’ அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விவசாயிகளில் ஒரு தரப்பினர் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும், இன்னொரு தரப்பினரோ இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.
இதற்கிடையில் பவானி சாகர் அணையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் நீளத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் இருகரைகளும் மண்ணால் அமைக்கப்பட்டவை.
இந்த கரைகளால் நீர்க்கசிவு ஏற்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து வாய்க்காலின் இரு கரைகளிலும் கான்கிரீட் தளம் அமைக்க 710 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்தத் திட்டத்துக்கான பணிகளை விரைந்து தொடங்கிடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று (மே 22) ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஒரு தரப்பு விவசாயிகள், அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பியதுடன் ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடம் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.
கீழ்பவானி கால்வாயில் உள்ள 44 பாசன சபைகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்துவது என்றும் அதன் பிறகே சீரமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
முன்னதாக விவசாயிகளின் அழைப்பை ஏற்று நேற்று தலமலை, அரச்சலூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 200 கடைகளை வியாபாரிகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் ஊழல்: ஆளுநரிடம் எடப்பாடி புகார்!
மலக்குழி மரணங்கள்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!
மாசெ வஹாப் தூக்கப்பட்டது ஏன்? நெல்லை திமுகவில் க்ரைம் பாலிடிக்ஸ்!