சென்னையில் 2வது விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு செல்லும் வழியில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் சிலரும் இன்று (செப்டம்பர் 4) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பரந்தூரில் 2வது புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பொது மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பரந்தூரில் உள்ள விவாசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்க சென்றுள்ளார்.
அவரோடு சென்னை மண்டல தலைவர் வி.கே துரைசாமி, சைதை சிவா மற்றும் விவசாயிகள் சிலரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பரந்தூருக்கு முன்னதாகவே காஞ்சிபுரம், நீர்வள்ளூர் காட்டு பகுதியில் வைத்து பிரவீன், குமார் சுனில் ஆகிய இரு டிஎஸ்பி தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் விவசாயிகளை வழிமறித்து கைது செய்துள்ளனர்.

விவசாயிகளை அச்சுறுத்துவது ஜனநாயக படுகொலை!
தொடர்ந்து காவல் நிலையத்தில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,
“விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை சந்திக்க சென்றபோது போலீசார் வழிமறித்தனர்.
திரும்பி ஊருக்கு செல்கிறோம், எங்களை விட்டுவிடுங்கள் என்று கூறியும், அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.
நாங்கள் விமான நிலையத்திற்கோ, வளர்ச்சிக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் விளை நிலங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை மிக குறைவாக உள்ளது.
அடக்குமுறையால், ஆணவத்தில் விவசாயிகளை ஒடுக்க முடியாது என்று தமிழக முதல்வருக்கு நான் சொல்லி கொள்கிறேன்.
கடந்த 2019ம் ஆண்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது. அந்த சட்டத்தை திமுக அரசு திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை அரசு கைப்பற்ற கூடாது.
விமான நிலையம் அமைக்கிறோம் என்ற பெயரில் காவல்துறையை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்துவது, விவசாய சங்க தலைவர்களை தடுப்பது ஜனநாயக படுகொலை.
ஒரு எதிர்கட்சி தலைவராக எப்படி ஒரு போராட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அணுகினாரோ, அதேபோல் இப்போதும் அணுக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நான் இருக்கும்வரை பரந்தூரில் விமான நிலையம் வராது : சீமான்