நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பரிசு தொகுப்பை புறக்கணித்து வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகனூர் தாலுக்கா வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து இதற்கான நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். இதற்கு அந்தப் பகுதி விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதவிர சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பின் பேரில், மோகனூர் தாலுகா வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், தமிழக அரசு வழங்கும் ரூ.1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிக்கப் போவதாக நாமக்கல் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளரிடம் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மனு அளித்தனர்.
மேலும் அந்தப் பகுதியில் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு முன்பு, பொங்கல் பரிசை புறக்கணிக்கிறோம் என நோட்டீஸ் ஒட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கல் பண்டிகையன்று தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பொங்கல் வைப்போம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பற்களின் நிறம் திடீரென்று மாறுகிறதா?
சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி எப்போது?