கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள அதிகாரிகளை அலுவலகத்திற்குள் அடைத்து வைத்து விவசாயிகள் இன்று (செப்டம்பர் 12) போராட்டம் நடத்தினர்.
உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்களது அனைத்து வேளாண் பொருட்களையும் வழக்கமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருட்களுக்கு ரூ. 80 லட்சம் வரை பணம் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படாமல் நிலுவையிலிருந்துள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து நிலுவையில் உள்ள பணத்தை விரைவில் செலுத்துமாறு கோரிக்கை வைத்ததோடு போராட்டமும் நடத்தி வந்துள்ளனர்.
ஆனால் மூன்று மாத காலங்களுக்கு மேலாக பணம் செலுத்தாமலே இருந்துள்ளது.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 12) காலை முதல் 100 மேற்பட்ட விவசாயிகள் விற்பனை கூடத்திற்கு வந்து நிலுவைத் தொகையை வழங்குமாறு கேட்டுள்ளனர்.
இதற்கு அதிகாரிகள் தாங்கள் ஏற்கனவே பணத்தைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது உளுந்தூர்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விவசாயிகள் நீண்ட நாட்களாகப் பணத்தைச் செலுத்தாமல் உள்ளதால், அலுவலகத்திலிருந்த 7 அதிகாரிகளை உள்ளே வைத்து கதவைப் பூட்டியுள்ளனர்.
இதனால் அதிகாரிகள் விவசாயிகளிடம் கதவைத் திறந்து விடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் கதவைத் திறந்து விட மறுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளையும் விடுவித்தனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
மோனிஷா
விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன்: விவசாயத்துறை அமைச்சர்!