காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் சுமார் 4,800 ஏக்கரில்,ரூபாய் 40 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட உள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் அதிகபடியான விமான சேவையை சமாளிக்க முடியவில்லை.
இந்த சூழலை சமாளிப்பதற்கு சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய இயலாததால் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த விமான நிலையம் மூலம் சென்னையின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமான நிலையத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் குணாகரப்பாக்கம், ஓ.ஏ.மங்களம், சிங்கிலிப்பாடி, எடையார்பாக்கம், அக்கம்மாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளும், வாலாஜாபாத் ஒன்றியத்தில், பரந்தூர், வளத்தூர், நெல்வாய், தண்டலம், நாகப்பட்டு, பொடாவூர் உள்ளிட்ட ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் எதிர்ப்பு
இந்நிலையில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வீடுகள் விவசாய நிலங்கள், விவசாயத்திற்கு பயன்படும் ஏரிகள் அடங்கியுள்ளன. இந்த விமான நிலையம் கட்டப்படுவதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர்.
இந்த விமான நிலையத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனர். அப்போதே, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆனால், விமான நிலையம் அமைய போவதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் புரளிகள், உண்மையல்ல என அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்திருந்தினர்.
வாழ்வாதாரம் பாதிக்கும்…
இதனை தொடர்ந்து தற்போது புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அரசு அனுமதி அளித்து உறுதிபடுத்தியதால் மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அச்சம் அடைந்துள்ளனர்.
”ஏற்கனவே விமான நிலையம் குறித்து அறிவிப்பு வெளியான போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தற்கு, அந்த செய்திகள் அனைத்தும் உண்மையல்ல என எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் தற்போது எங்களிடம் எதுவும் கலந்துரையாடாமல் விமான நிலையம் குறித்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் எங்கள் ஊர் மக்களிடம் கலந்து பேசி ஒரு முடிவை எடுக்க உள்ளோம்” என கூறியுள்ளனர்.
இப்போது வந்திருக்கும் அறிவிப்பின் நிலை என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை, அரசு துறை சார்பாக அதிகாரிகள் எங்களிடம் வந்து பேசுவர்கள் என்று எதிர்ப்பார்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
ஆகஸ்ட் 5 முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு !