திருச்சி மாவட்டம் பெரகம்பியைச் சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயியான இவர் மீது 2006ஆம் ஆண்டு திருச்சி சிறுகனூர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் அவர் மீதான குற்றத்தை குறைத்து பதிவு செய்ய காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் எஸ்.பி.செல்வராஜ் ரூ.6,000 லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் காவல் கண்காணிப்பு பிரிவில் குற்ற எண்.15/2006, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய அம்பிகாபதி தலைமையிலான காவல்துறையினர் ஆய்வாளர் செல்வராஜ், சீனிவாசனிடம் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் 28, 2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக முன்னாள் காவல் ஆய்வாளர் செல்வராஜுக்கு, நீதிபதி கார்த்திகேயன் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் கூடுதல் சிறை தண்டனையும்,
அதுபோன்று அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும்,

10,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்த நீதிபதி, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவாகும் வழக்குகளில் போலீஸ் ஒருவரை கையும் களவுமாக பிடிக்க போகிறது என்றால், அந்த புகார்தாரரிடம் இருந்துதான் பணத்தை வாங்கி அதில் ராசாயனம் தடவி லஞ்சம் கேட்க சொன்னவர்களிடம் கொடுக்க சொல்வார்கள்.

அப்படித்தான் சீனிவாசனிடம் இருந்தும் ரூ.6000 தொகையை வாங்கி, அதில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜிடம் சீனிவாசன் கொடுக்கும் போது மறைந்திருந்து கையும் களவுமாக பணத்துடன் பிடித்தார்கள்.
ஆனால் 17 ஆண்டு ஆன பிறகும், இன்னும் அந்த 6 ஆயிரம் தனக்கு கொடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார் சீனிவாசன்.
இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக என்னை ஒரு மாதம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த செல்வராஜ் என்னிடம் லஞ்சம் கேட்டார்.
இறுதியாக 6 ஆயிரம் தருகிறேன் என ஒப்புக்கொண்டு வந்தேன். தொடர்ந்து அன்றைய லஞ்ச ஒழிப்புத் துணை காண்காணிப்பாளர் அம்பிகாபதியிடம் காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்கிறார் என்று புகார் கொடுத்தேன்.
ஏற்கனவே 2002ஆம் ஆண்டு முத்துகருப்பன் என்ற விஏஓ லஞ்சம் கேட்ட விவகாரத்தில் அன்று டிஎஸ்பியாக இருந்த சுரேஷ்குமாரிடம் மனு கொடுத்தேன். அப்போது அம்பிகாபதி இன்ஸ்பெக்ட்ராக இருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு முத்துகருப்பன் பிடிபட்டார்.
அந்த அனுபவத்தின்படி காவல் ஆய்வாளராக இருந்த செல்வராஜ் மீதும் மனு கொடுத்தேன். 1.11.2006ல் செல்வராஜ் கையூட்டு வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நடந்தது. இந்த காலகட்டத்தில் பல்வேறு தொல்லைகளை சந்தித்தேன். ரவுடிகளை வைத்து மிரட்டினார்கள். இவ்வழக்கில் தீர்ப்பு வந்து செல்வராஜுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு முடிந்தும், தீர்ப்பு வந்த பிறகும் கூட நான் கொடுத்த அந்த 6 ஆயிரம் ரூபாய் இன்னும் எனக்கு வரவில்லை. இது எனக்கு வேதனை அளிக்கிறது, சட்டவிரோதமானது.
2012லேயே என்னிடம் குறுக்கு விசாரணை நடத்தி முடித்துவிட்டார்கள். அந்த பணம் கேட்டு நான் எழுதி கொடுத்தேன். சிறப்பு நீதிமன்றத்திலும் 2017 காலகட்டத்தில் எழுதி கொடுத்தேன்.
இருந்தாலும் எனக்கு அந்த 6 ஆயிரம் வரவில்லை. அப்படியானால் எதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை இருக்கிறது. அந்த பணம் எனக்கு திரும்ப வர வேண்டும். இதெல்லாம், லஞ்சம் வாங்குபவர்களை பிடிக்க வேண்டுமென்றால் அதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டும் போல் உள்ளது. நானாவது 6000 ரூபாய்தான் கொடுத்திருக்கிறேன். லட்சக்கணக்கில் கொடுத்தவர்களின் பணமும் நிலுவையில் இருக்கிறது.
தற்போது எனக்கு கால் அடிபட்டுள்ளது. அந்த பணம் கொடுத்தால் மருத்துவ செலவுக்கு பயன்படும். நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த பணத்தை கேட்டால் அலைக்கழிக்கிறார்கள். நிலுவையில் உள்ள பணத்தை எல்லாம் விடுவிக்க சொல்லுங்கள். இன்று (ஏப்ரல் 17) இதுசம்பந்தமாக எழுதி கொடுக்க திருச்சி சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறேன்” என்றார்.

இதுகுறித்து முன்னாள் டிஎஸ்பி அம்பிகாபதியிடம் விசாரித்த போது, “லஞ்ச வழக்குகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தீர்ப்பு வந்த பிறகுதான் பணம் கிடைக்கும். ஆனால் லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன், புகார்தாரர்களுக்கு பணம் கிடைக்கும் வகையில் நான் அரசுக்கு ஒரு சிறப்பு கடிதம் எழுதினேன்.
அதன்படி, புகார்தாரர்களிடமிருந்து பாண்டு ஒன்று பெற்று நீதிமன்றத்தில் கொடுப்போம். அதில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனவுடன் புகார்தாரர்களுக்கு பணம் கொடுக்கலாம். ஒருவேளை அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அந்த பணத்தை அவர் மீண்டும் கொடுத்துவிடுவார் என்று எழுதிக் கொடுப்போம். அந்த பாண்டை நீதிமன்றத்தில் கொடுத்தால் பணம் வந்துவிடும்.
நான் பெரும்பாலும் 1000 ரூபாய் முதல் 10,000 ரூபாயிலான தொகைக்கு பாண்டு கொடுத்து நீதிமன்றத்தில் இருந்து பணம் வாங்கி கொடுத்திருக்கிறேன். நான் டிஎஸ்பியாக இருந்தவரை சீனிவாசன் இவ்வாறு என்னை அணுகியதில்லை.
தற்போது சீனிவாசன் வழக்கில் தீர்ப்பு வந்துள்ளதால் அவர் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.
லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
”ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் சுமார் 500 வழக்குகள் வரையில் போடுவார்கள். இந்த 500 வழக்குகளும் டிராப்ட் (பணம் கொடுத்து பிடிப்பது) வழக்கு ஆகும்.
இப்படி ஊழல் தடுப்பு பிரிவு கைது செய்பவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அந்த பணத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிடுவார்கள். அந்த பணத்தை மாவட்ட கருவூலத்தில் நீதிமன்றம் டெபாசிட் செய்துவிடும்.
இந்நிலையில் லஞ்ச வழக்கில் தீர்ப்பு அளிக்கும் நீதிமன்றம், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் வழங்கும். மேல்முறையீட்டுக்கான அவகாசம் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் மனு கொடுத்து பணத்தை பெற்றுகொள்ளலாம்.
இதுபோன்று பணம் பெற காலதாமதம் ஆவதால், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் புகார்தாரர்களுக்கு பணம் கொடுக்கும் வகையில் அரசு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வழங்குகிறது. இதை முறையாக பயன்படுத்த வேண்டும்” என்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு போகாமல் நேராக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் லஞ்சம் கொடுத்தே வேலையை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த தாமதமே ஏற்படுத்திவிடுகிறது.
பிரியா
“ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடர்வேன்”: அண்ணாமலை
கேங்க்ஸ்டர் முதல் அரசியல்வாதி வரை: யார் இந்த அதிக் அகமது?
