போலி பத்திரப்பதிவு ஆவணங்களை ரத்து செய்யும் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 9 பத்திரங்கள் போலியானவை என்று கூறி மாவட்ட பதிவாளர் புகார் அளித்தார்.
இந்த புகார் அடிப்படையில், பத்திரப்பதிவு ஆவணங்கள் உண்மை என்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி ஹரிநாத் என்பவருக்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஹரிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 14) உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது போலி ஆவணங்களை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளர் தாக்கல் செய்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆவணங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று விசாரிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது.
அதன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் முன்பு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் ஆவணங்கள் மோசடி குறித்து மாவட்ட பதிவாளர் புகார் அளிக்கும் உரிமையைப் பறிக்க முடியாது எனக் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் மாவட்ட பதிவாளருடைய நோட்டீஸுக்கு 2 வாரங்களில் விளக்கம் அளிக்க மனுதாரருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இரு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு 12 வாரங்களுக்குள் புகார் மீது சட்டப்படி முடிவெடுக்க வேண்டும் என்று மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
மோனிஷா
அதிமுக வேட்பாளருடன் பெண் வாக்குவாதம் : தலைக்கு மேல் கும்பிடு போட்ட தென்னரசு!
நாகையில் ஒதுங்கிய சீன கேஸ் சிலிண்டர்: மீனவர்கள் அதிர்ச்சி!