பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களை போலியாக நியமிப்பது தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக போலி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் கேட்டு 295 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியதை அடுத்து, போலி ஆசிரியர் நியமன முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய உள் விசாரணையில், 2023-24 ஆண்டில் 184 நபர்கள் பல பொறியியல் கல்லூரிகளுக்கு பேராசிரியர்களாக தங்கள் பெயர்களைக் கொடுத்துள்ளனர். மேலும், 2024-25-ம் ஆண்டுக்கான 211 ஆசிரிய உறுப்பினர்கள் 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பதவிகளை நிரப்பியுள்ளனர்.
இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தமிழக அரசு பிரதிநிதி அடங்கிய விசாரணைக் குழுவை அண்ணா பல்கலைக்கழகம் அமைத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் விளக்கம் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில், போலி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் கேட்டு 295 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிகிறது. பிற கல்லூரிகளின் ஆசிரியர்களாகக் காட்டப்பட்ட ஆசிரியர்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகலுடன் அசல் ஆதார் எண் மற்றும் பான் கார்டுகளை வழங்குமாறும் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுள்ளது.
“நீங்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, உரிய ஆவணங்களை பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்துள்ளீர்கள் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், உங்கள் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டு 2024 – 25-ல் நடத்தப்படும் அனைத்துத் படிப்புகளுக்குமான இணைப்பைத் திரும்பப் பெறுவதற்கு கல்லூரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை விளக்குமாறு நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஏழு நாட்களுக்குள் கல்லூரிகள் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லை என்றால் நிர்வாகத்திடம் எந்த விளக்கமும் இல்லை என்று கருதப்படும்.
2024 – 25-ம் கல்வியாண்டில் உங்கள் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து படிப்புகளையும் அங்கீகரிக்காமல் ‘தானாக முன்வந்து’ நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகத்திற்கு சுதந்திரம் உள்ளது” என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசியுள்ள அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்,
“2023-24 கல்வியாண்டில் 292 கல்லூரிகளுக்கும், 2024-25 கல்வியாண்டில் 295 கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சுமார் 100 கல்லூரிகளில் பல உள்ளீடுகளுடன் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
இந்த ஆசிரியர்கள் எங்கு பணியாற்றினார்கள் என்பதை அறிய விளக்கம் கேட்டுள்ளோம். விளக்கத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பொது கவுன்சிலிங்கின் முதல்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், போலி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை, பொறியியல் கல்லூரிகளின் தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : பிரதமர் – தொழில்துறை சந்திப்பு முதல் மனுபாக்கர் பதக்க வேட்டை வரை!
கிச்சன் கீர்த்தனா : பட்டர் ஃப்ரூட் சாக்கோ
டெய்லர் அக்காவா? என்னடா நடக்குது இங்க… அப்டேட் குமாரு
விவசாயத்தில் நவீனம்: தமிழகத்தில் சிங்கப்பூர் அரசு செய்யப் போகும் அசத்தல் திட்டம்!