போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாகப் பரவி வரும் தகவல் உண்மையல்ல என்று சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவின் போது, நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,யூடியூப் பிரபலங்கள் சுதாகர், கோபி உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கலந்து கொண்டு டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்த பட்டம் வழங்கும் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொள்ளவில்லை என்பதால் விழா ஏற்பாடு செய்தவர்கள் வடிவேலுவை நேரில் சந்தித்து டாக்டர் பட்டத்தினை வழங்கினர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட டாகடர் பட்டம் போலியானவை என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், ”இந்த சம்பவத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது.
இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துள்ளோம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி போலீசிஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் நீதிபதி வள்ளி நாயகமும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்” என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த நீதிபதி வள்ளி நாயகம், “நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் விழா நடந்ததால் தான் கலந்து கொண்டேன்.
விழா நடத்திய தனியார் நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் போலி டாக்டர் பட்டம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் இயக்குநர் ஹரிஷ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு விருது விழாவை நடத்தியிருந்தோம்.
அது தொடர்பான தகவல்கள் செய்தியில் வந்து கொண்டிருக்கிறது. விருது விழாவிற்கான முறையான அனுமதி இல்லை என்று செய்தி வந்திருந்தது.
ஆனால் முறையான அனுமதி நகல் என்னிடம் இருக்கிறது. நாங்கள் உண்மையான பட்டங்களைத் தான் வழங்கியிருந்தோம். அதுமட்டுமில்லாமல் இது அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த பட்டம் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆனால் இது அண்ணா பல்கலைக்கழகம் அரங்கில் நடைபெற்ற விழா மட்டுமே. ஆனால் டாக்டர் பட்டம் போலியானவை என்று தவறான தகவல்கள் பரவி இருக்கிறது. இதை சரி செய்வதற்கு சட்ட நிபுணர்களை வைத்து முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
எனவே யாரும் இதற்காகப் பதட்டப்பட வேண்டாம். யாரும் ஏமாற்றப்படவில்லை. சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
நாகாலாந்து, திரிபுரா மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி!
ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக!

Comments are closed.