நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவின் போது, நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,
யூடியூப் பிரபலங்கள் சுதாகர், கோபி உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இந்த பட்டம் வழங்கும் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொள்ளவில்லை என்பதால் விழா ஏற்பாடு செய்தவர்கள் வடிவேலுவை நேரில் சந்தித்து டாக்டர் பட்டத்தினை வழங்கினர்.
டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு நடிகர் வடிவேலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பட்டம் போலியானவை என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், ”கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது.
இதனை மோசடியாகவே அண்ணா பல்கலைக்கழகம் கருதுகிறது. இந்த சம்பவத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது.
இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துள்ளோம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி போலீசிஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் நீதிபதி வள்ளி நாயகமும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். டீன் நீதிபதியின் கடிதத்தைப் பார்த்தவுடன் அனுமதி கொடுத்துவிட்டார்.
அந்த கடிதம் உண்மையா அல்லது அதுவும் போலியா என்று விசாரிக்க வேண்டும். அந்த கடிதத்தில் இந்திய அரசின் முத்திரை இருந்தது.
இது குறித்து நீதிபதி வள்ளி நாயகத்திடம் கேட்க வேண்டும் என்று தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை.
ஹரிஷ் என்ற நபர் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பில் இருந்து டாக்டர் பட்டம்போல் கொடுத்து இருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுரவ டாக்டர் பட்டத்தை ஒரு பல்கலைக்கழகம்தான் கொடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் போலி டாக்டர் பட்டம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு நீதிபதி வள்ளி நாயகம் அளித்த விளக்கத்தில் ”எந்த கடிதத்திலும் நான் கையெழுத்துப் போடவில்லை. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் விழா நடந்ததால் தான் கலந்து கொண்டேன். விழா நடத்திய தனியார் நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
எங்கு போய் நட்பை தேடுவேன்…இப்போது ஃபீல் பண்ணும் செல்வராகவன்
ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ லைவ்!