அண்ணாமலை ஜனநாயக காவலர்! டேவிட்சன் குற்றமற்றவர்: பாஸ்போர்ட் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றம்

தமிழகம்

போலி பாஸ்போர்ட் விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டியுள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தில் அண்ணாமலையால் குற்றம் சாட்டப்படும் தமிழக உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் இலங்கையைச் சேர்ந்த சிலர், 2019ஆம் ஆண்டு பாஸ்போர்ட் பெற்று, வெளிநாடு செல்ல முயற்சி செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி மதுரை நகர க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன்பேரில் புலன் விசாரணை அதிகாரிகள் மதுரையில் இயங்கி வந்த 4 பயண முகவர்களின் அலுவலகங்கள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 124 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர் புலன் விசாரணையில் 51 பேர் இந்திய பாஸ்போர்ட் பெற்ற விவரமும் தெரிய வந்தது. இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையில் நடந்த போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து அவர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தும் விரிவான மனு ஒன்றையும் அளித்தார்.
டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர்

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை கோச்சடையை சேர்ந்த சுரேஷ் குமார் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.

:”என் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக 2022 ஏப்ரல் 19 ஆம் தேதி பயண முகவர் நசிருதீன் மூலமாக விண்ணப்பித்தேன். எனது பயண முகவர் நசிரூதினுக்கு குற்றவியல் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி என் பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் இருக்கிறார்கள் அதிகாரிகள். எனக்கும் நசிரூதினுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பயண முகவர் மட்டுமே. எனவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஜூலை 27) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது க்யூ பிரிவு போலீஸாரின் வழக்கறிஞரும், “நசிரூதின் மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அவர் மூலமாக விண்ணப்பித்த சுரேஷ்குமாரின் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்கலாம். சுரேஷ்குமாருக்கும் பயண முகவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதி, “இந்த வழக்கில் மனுதாரர் சுரேஷ்குமார் மீது குற்றமில்லை என்பது உறுதியானதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடுகிறேன்” என்றவர் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கிளப்பிய போலி பாஸ்போர்ட் விவகாரங்கள் பற்றியும் கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, “பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர். அதேநேரத்தில், போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் ஜனநாயகத்தின் காவலர். அவர் இல்லையெனில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது” என குறிப்பிட்டார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
1
+1
3
+1
7
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.