சென்னையை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தில் 14 கிளைகளுடன் செயல்பட்ட போலி வங்கியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் தரப்பிலிருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் கிளைகளை ஆரம்பித்து போலியாக வங்கி ஒன்று செயல்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
RAFC bank என்ற பெயரில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாய கூட்டுறவு வங்கி அம்பத்தூரில் கார்ப்பரேட் அலுவலகம் அமைத்து கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வந்துள்ளது.
சென்னை மத்திய குற்ற பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உண்மையான வங்கிகளைப் போலவே இணையதளம், பாஸ்புக், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் ,நகை கடன் வங்கிக் கடன், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, வைப்புத் தொகை ஆகியவை RAFC வங்கி என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் திருமங்கலம், நாமக்கல், திருவண்ணாமலை விருதாச்சலம், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுமார் 14 கிளைகளை அமைத்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்திரபோஸ் வேதாச்சலம் என்னும் பட்டதாரி இந்த போலியான வங்கியை நடத்தி வந்திருக்கிறார். 3000 த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல கோடி ரூபாய் அளவில் பணப்பரிவர்த்தனை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மற்ற கிளைகளில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரிசர்வ் வங்கியின் போலியான அனுமதி சான்றிதழை பயன்படுத்தி இந்த வங்கியை நடத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு வங்கியின் கிளைகளில் பலரை பணி அமர்த்தியுள்ளார் சந்திரபோஸ்.
மேலும் பல தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள் ஆகியவற்றுடன் இணைந்து பணத்தைப் பெற்று மோசடி செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கி ஒன்றில் கார்ப்பரேட் அக்கவுண்ட் உருவாக்கி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி வங்கியை நடத்தியதும் தெரியவந்துள்ளது
இந்த போலியான வங்கி விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள், பெண்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியோரை மேம்படுத்துவதாக கூறி மோசடியில் இறங்கியதும் தெரியவந்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து அதிக பணத்தை வசூல் செய்து மோசடி செய்வதற்காக பல்வேறு டெபாசிட் திட்டங்களை அறிவித்து பணத்தை வசூல் செய்யும் பணியில் ஈடுபட துவங்கியிருக்கிறார் சந்திரபோஸ். தற்போது போலீசார் அதைத் தடுத்து நிறுத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், போலி முத்திரைகள், போலி ஆவணங்கள், ஸ்வைப்பிங் மிஷின்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
மேலும் பென்ஸ் சொகுசு கார் ஒன்றும் சந்திரபோஸ் இடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கியின் வைப்பு நிதியிலிருந்து 56 லட்ச ரூபாய் பணத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
இந்த மோசடியில் முக்கிய மூளையாக செயல்பட்ட சந்திர போஸ் வேதாச்சலம், பல்வேறு பட்டப் படிப்புகளை படித்துள்ளதாகவும் வெளிநாட்டில் பட்டம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
பிடிபட்ட சந்திரபோஸ் வேதாச்சலத்திற்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் யார் மற்றும் வங்கி தொடர்புடைய ஊழியர்கள் யாரேனும் உடந்தையாக உள்ளார்களா என மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் இருந்து சுருட்டப்பட்ட பணம் எவ்வளவு, வேறு என்ன மோசடிகளை எல்லாம் செய்திருக்கிறார் என்பதை விசாரிக்க போலி வங்கியின் தலைவர் சந்திர போஸ் வேதாச்சலத்தை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கலை.ரா
வேந்தர் பதவியை பறிக்க முடிவு: கேரள ஆளுநருக்கு எதிராக சட்டம்!
சிவாஜி படம்: எம்எல்ஏ மீது பாய்ந்த வழக்கு!